Monday, June 20, 2011

அவன் இவன்... உண்மையில் எவன்?

வித்தியாசமான கதாபாத்திரம் அமைக்கவேனும் என்ற ஒன்று மட்டுமே இந்த படத்தின் குறிக்கோல் போல ஆறுதலாய் சொல்லிக்கொண்டாலும், வித்தியாசமே இல்லாமல் பிதாமகனையும் நந்தாவையும் கலந்து அப்பியிருக்கிறார் பாலா.

கதாநாயகிகள்.. பாலாவின் பார்வையில் பெண்கள் எப்போதுமே லூசுகள்தான். அதனால் தான் திருடன்,பொருக்கி, குடிகாரன் போன்ற அத்துனை நல்லபழக்கமும் இருந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு காதலில் விழுந்துவிடுகின்றனர் கதா நாயகிகள். யதார்த வாழ்வில் உண்மை லூசுகள் கூட அவ்வாறு செய்வதற்கில்லை. படித்துமுடித்துவிட்டு, வேலையிலும் சேர்ந்துவிட்டு பத்துப்பதினைந்து பெண்களுக்கு அப்ளிகேசன் போட்டும் ஒன்றும் கிட்டாமல் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு பெண்களை மடக்க அடுத்த முயற்சி திருடுவதும், பொருக்கித்தனம் செய்வதும், தண்ணி அடிப்பதும் தான் போல.

ஹைனஸ்... ஊர அடிச்சு ஒலையில போட்டு உருவாகியிருந்த அந்தக்கால ஜமின்தார்களின் இந்தக்கால பரம்பரையில் பிறந்த ஹைனஸ் அதை தக்க வைக்கும் திறமை கூட இல்லாமல் இன்னொறு ஏமாத்துக்காரனிடம் ஏமாந்து போய் பிழைக்கத்தெரியாத அப்பாவியாக இருக்கிறார். மீதமிருக்கும் மிச்ச சொச்ச காசில் தண்ணி அடிப்பதும் ஊரைசுற்றுவதுமே இவரது பிரதான வேலை. ஒருவேளை காசு அதிகமில்லாததால்தான் அப்படி இப்படி பெண்கள் விசயத்திலும் சல்லாபம் செய்ய முடியாமல் போயிருக்கும் போல.

போலீசு அதிகாரி..பல்லை நெரித்துக்கொண்டும் பட படவென்று பேசிக்கொண்டும், எந்த நேரமும் எந்த பெண்ணையும் கற்பழிக்க காத்துக்கொண்டும், வில்லத்தனமாகவும் மட்டுமே சிந்திக்க தெரிந்த தமிழ் சினிமாவின் போலீசு கதாப்பாத்திரங்களின் தலைகீழ் பிம்பம் இவர். திருடர்களுக்கு கெடாவெட்டி விருந்து போட்டு திருட்டு நாயகர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் தலைகவிழ்ந்து நம்மை சிரிக்கவைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த காவல் அதிகாரி கதாபாத்திரம் அதையும் செய்ய தவறுகிறார்.. யதார்த்தமேயில்லாத காரணத்தால்.

வில்லன்... கறவை வற்றிய மாட்டை வயிற்றுப்பசிக்கு விற்கிற விவசாயியும், அதை வாங்கி தேவை இருக்கிற இடத்திற்கு அனுப்புகிறவனும் தான் இந்த படத்தின் வில்லன்கள். த்த்தூ... மாடேத்திக்கிட்டு போற லாரிய ஏதோ சந்தன கடத்தல் இல்ல கஞ்சா கடத்தல் பன்னுவது மாதிரி காட்டியிருக்கிறது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய திருப்பம்.. மாட்டை கறிக்கு கடத்துறது போன்ற புதியதொரு வில்லத்தனத்தை அறிமுகப்படுத்திய பாலவிற்கு கோடானு கோடி நன்றிகள்.. அடுத்தடுத்து ஆடு கடத்தும் வில்லன்கள்.. கோழி கடத்தும் வில்லன்கள்.. மற்றும் கொக்கு,புறா,வாத்து,நண்டு கடத்தும் வில்லன்கள், எறும்பு மருந்தடிக்கும் குரூர குடும்ப வில்லிகள், கொசு மருந்தடித்து கொசுக்களைக் கொல்லும் வக்கிர முனிசிபலிட்டி வில்லன்கள்.. பூச்சிக்கொல்லி மருந்தடித்தும், தானியங்களை உண்ணும் எலியினை அழிக்க எலிப்பொரி வைத்தும் கொல்லும் விவசாயி வில்லன்கள் போன்ற புதிய பாத்திரங்களுக்கு பிள்ளையார் சுழி..இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் சுழி போட்ட பாலாவிற்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் யாம்.. கண்ணுக்குட்டிய காம்ப நக்கவிட்டு பால் சொரந்ததுமே இழுத்துக்கட்டி சொட்டுவிடாம கறக்கற பாலை, தயிரும் வெண்ணையுமா திண்ணு கொழுக்கிற கூட்டத்தை குளிர்விக்க அவர்கள் உண்டு வீசிய சக்கை எச்சமான கறவை வற்றிய வயசான அடிமாட்டினை தங்களின் புரதத்தேவைக்காகவும, உடல் சக்தி தேவைக்காகவும் விலை மலிவாக கிடைக்கும் காரணத்தினால் உண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குப்பத்து கார கதாபாத்திரங்களையே(ஆர்யா,விஷால்) துணைக்கு இழுக்கிறது யாருக்கு கொடுக்கிற அல்வா...?

இவை அத்தனைக்கும் மேலே சற்றே ஆறுதலாய் இருக்ககூடியது விஷாலின் நடிப்பு.  வேறு எதற்காக திட்டினாலும் பாலாவை இங்கே பாராட்டியே ஆகவேண்டும். இந்த படத்திற்காக பாலாவிற்கு நன்றிகடன் பட கடமைபட்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே. விஷாலும், விவகாரம் பிடித்தவர்களும்.