Tuesday, August 14, 2012

தோகை விரிக்கும் வான்கோழி

நான் என் பையனுக்கு சொன்ன கதை:
ஒரு ஊரில் ஒரு வான்கோழி இருந்துச்சாம். அந்த வான்கோழி தினமும் சாப்பிட்டு முடிச்சப்புறமா அன்னாந்து வானத்த பாத்துக்கிட்டு உக்காந்திருக்குமாம். அப்படி ஒரு நாள் உக்காந்திருக்கும்போது நிறைய கொக்கு ஒன்னு பின்னாடி ஒன்னு வரிசையா பறந்து போறத பாத்திச்சாம். அப்ப அட இந்த கொக்கெல்லாம் எவ்வளவு அழகா பறக்குதே நம்மாள பறக்கமுடியுமான்னு யோசனை செய்ததாம். அப்ப அதுக்கு பளீர்ன்னு ஒரு எண்ணம் தோனிச்சாம். நமக்கும் இறக்கை இருக்குதே அப்ப நாமளும் ஒரு பறவையாதானே இருக்கனும் ஆனா நாம ஏன் பறக்க மாட்டேங்கிறோம்னு தோனிச்சாம். உடனே ஓடிப்போயி அவங்க அம்மா அப்பாகிட்ட கேட்டுச்சாம் அம்மா.. அம்மா.. நாமளும் ஒரு பறவை தானே, நமக்கும் இறகு இருக்குதே, கொக்கு காகம், கழுகு மாதிரி ஏன் நாமளும் பறக்க மாட்டேங்கிறோம் அப்படீன்னு. ஆனா அதோட அம்மா அப்பாவுக்கு அது ஏன்னே தெரியலையாம். அந்த வான்கோழி அதோட நண்பர்கள் கிட்டையும் கேட்டிச்சாம். ஆனா ஒருத்தருக்குமே தெரியலையாம்.

வான்கோழிக்கு சோகமா ஆயிருச்சாம். அந்த வான்கோழி நினைச்சுதாம் சரி ஒருநாள் நாமளும் பறந்து பாக்கலாம்ன்னு. அடுத்த நாள் காலையில எல்லோரும் இறை தேடி சாப்பிட்டுகிட்டு இருக்கும்போது இந்த வான்கோழி அதோட இறகை அடிச்சு பறக்கறதுக்கு முயற்சி செஞ்சுதாம். ம்ஹூம் ஒன்னும் முடியலை. ஒரு சில இறகு பிஞ்சி கீழே விழுந்தது தான் மிச்சம். அதோட நண்பர்கள் எல்லாரும் கிண்டல் செஞ்சாங்களாம். அந்த வான்கோழி அதையெல்லாம் கண்டுக்காம பக்கத்துல இருந்த ஒரு பாறை மேல ஏறி குதிச்சி பறந்து பாத்திச்சாம். ஆனா தொப்புன்னு கீழே விழுந்திடிச்சாம். அதை பாத்த அவங்க அம்மா அப்பா சொன்னாங்களாம், பறக்கறதெல்லாம் இப்ப நமக்கு எதுக்குடா, நம்மாளயெல்லாம் பறக்க முடியாது, நமக்கு தேவை என்ன இறைதானே, அது குப்பையை கிளரினாதானே கிடைக்கும் பறக்கிறதுக்கு முயற்சி பன்னி இப்படி உன்னோட உடம்பை ஏன் நோகடிச்சுக்கிற அப்படின்னு கேட்டாங்களாம்.

இருந்தாலும் வான்கோழி எப்படியாச்சும் பறந்தே தீரனும்ங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்திச்சாம். அது பக்கதுல ஒரு குன்றுல வாழ்ந்து வந்த ஒரு கழுக போயி பாத்திச்சாம். வான்கோழி கழுகு கிட்ட எனக்கு பறக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு, ஆனா என்னால எவ்வளவு முயற்சி செய்தாலும் பறக்கவே முடியல, அதனால நீங்க எனக்கு பறக்கறதுக்கு சொல்லித்தர முடியுமான்னு கேட்டிச்சாம். அதை கேட்ட கழுகு கொஞ்ச நேரம் யோசிச்சாம். அப்புறம் வான்கோழிகிட்ட சொல்லிச்சாம் பறக்கறதுக்கு உடல் எடை அதிகமா இருக்கக் கூடாது, இறக்கைகள் ரொம்ப உறுதியாவும், உடல் எடைக்கு ஏத்த மாதிரி பெரியதாவும் இருக்கனும். ஆனா உனக்கு உடல் எடை அதிகம், காலம் காலமா உன்னோட முன்னோர்கள் பறக்கவே செய்யாததால இறகெல்லாம் சூம்பி போய் சின்னதாவும் உறுதியில்லாமலும் இருக்கு. இதையெல்லாம் மீறி நீ பறக்கனும்னா அதுக்கு உடல் வருத்தி நிறைய பயிற்சி செய்யனும். அதுக்கு நிறைய காலமும் உழைப்பும் தேவைப்படும், சிரமம் அதிகம் இருக்கும், பறவாயில்லையா உன்னால முடியுமான்னு கேட்டுச்சாம். வான்கோழிக்கு இதைக்கேட்டவுடனே ஒரு தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வந்திச்சாம். எவ்வளவு சிரமப்பட்டாலும் சரி நான் அத்தனை முயற்சியும் செய்வேன்னு உறுதியா சொல்லிச்சாம்.

கழுகு ஒவ்வொன்னா செய்யவேண்டிய பயிற்சிகளை வான்கோழிகிட்ட சொல்லிச்சாம். முதல்ல நீ உன்னோட உடல் எடையை குறைக்கனும் ஆனா அதே சமயத்துல உறுதியாவும் ஆக்கனும், அப்புறம் உன்னுடைய இறகுகளை மிக உறுதியானதாகவும் உன் உடல் எடையை தாங்கக்கூடிய வலிமை உள்ளதாவும் ஆக்கனும், அப்புறமா உன்னோட இறகுகள் சின்னதா இருக்கிறதால மற்ற பறவைகளோட உதிர்ந்த இறகுகளை சேகரிச்சு அதைக்கொண்டு செயற்கை இறக்கை தயாரித்து ஒன்றுசேர்த்து கட்டி உன்னோட இறக்கைகளை பெரியதாக ஆக்கனும். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா பறக்கறதுக்கு பயிற்சி செய்யனும்னு சொல்லிச்சாம்.

கழுகு வான்கோழிகிட்ட இதில் முதல் கட்ட பயிற்சியா உடல் எடை குறைகிறதுக்காக தினமும் பல கிலோமீட்டர் தூரம்வரை நடை பயிற்சியும், ஒடும் பயிற்சியும் செய்திட்டு கொஞ்ச காலம் கழித்து வான்னு சொல்லிச்சாம். வான்கோழி இப்படியே தொடர்ந்து நடை பயிற்சியும் ஓடும் பயிற்சியும் தொடர்ந்து ஆறு மாதம் செய்துவிட்டு கழுகுகிட்ட போய் அடுத்த பயிற்சி பத்தி கேட்டுச்சாம். இப்ப வான்கோழியின் எடை பாதியா குறைந்தும் ஆனா உடல் இரு மடங்கு உறுதியாவும் ஆயிருந்ததாம். இதுவே வான்கோழிக்கு ஒரு புத்துணர்சி வந்தாமாதிரி இருந்ததாம். கழுகு அடுத்த பயிற்சியா இறகை உறுதி செய்வதற்காக சிறு சிறு கட்டைகள் இரண்டை எடுத்து வான்கோழியின் இறக்கையில் கட்டிசாம். இப்போ மெதுவா இறக்கையை மேலும் கீழும் அசைக்க சொல்லிச்சாம். முதலில் வான்கோழி இலகுவா அசைச்சாலும் அதையே திருப்பி திருப்பி செய்யும்போது ஒரே வலி எடுத்துச்சாம். ஆனா கழுக்கு சொன்னதால தினமும் பல மணி நேரம் இந்த பயிற்சிய செஞ்சிச்சாம். மீதி நேரத்தில ஒடும் பயிற்சியையும் தொடர்ந்து வந்திச்சாம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கட்டையின் அளவை அதிகப்படுத்தி அசைக்கும் வேகத்தையும் கூட்டி பயிற்சி பன்னிச்சாம். இப்போ வான்கோழியின் இறகு கொஞ்சம் கொஞ்சமா திடமா மாறிக்கிட்டு வந்திச்சாம். சிறிது காலம் கழித்து வான்கோழி மறுடியும் கழுகுகிட்ட போச்சாம். வான்கோழியின் உறுதிய பாத்து கழுகுக்கு பெருமையா இருந்திச்சாம்.

அடுத்த கட்டமா கழுகும் வான்கோழியும் சேர்ந்து அந்த சுற்றுவட்டாரத்தில உதிர்ந்து கிடக்கிற இறகுகளை சேகரிச்சு வந்தாங்களாம். ஒரு அளவுக்கு போதுமான இறகு சேகரிச்சதும் கொஞ்சம உறுதியான ஆனா சன்னமான மூங்கில் பிரம்பு எடுத்து அதில் இறக்கை போல சேகரித்த இறகுகள் எடுத்து நரம்பு கொண்டு ஒன்றுசேர்த்து கட்டி வான் கோழியின் இறகில் சேர்த்து இனைத்து உறுதியா கட்டினாங்களாம். பின்னர் கழுகு வான்கோழிக்கிட்ட இதுவரை செய்துவந்த பயிற்சிகள் அனைத்தையும் இந்த செயற்கை இறக்கையுடன் மீண்டும் சிறிது காலத்திற்கு செய்ய சொல்லிச்சாம். வான்கோழிக்கு புதிதாக கட்டியிருக்கிற இறகை சுமந்து கொண்டு பயிற்சி செய்வது முதலில் சிரமமா இருந்திச்சாம். ஆனா போக போக பழகிடுச்சாம். இப்போ வான்கோழி பறக்கும் பயிற்சிக்கு தயார் நிலையில் இருந்திச்சாம்.
கழுகு வான்கோழியை அழைச்சு கொஞ்சம் கொஞ்சமா இறகை அடிக்க சொல்லி கொடுத்திச்சாம். வான்கோழி இறகை அசைக்க அசைக்க லேசா கால் தரையில் படாமல் மேலே போச்சாம். அவ்வளவுதான் ஒரு வினாடி தான் அதால தாக்குப்பிடிக்க முடிஞ்சதாம். அப்புறம் தாங்க முடியாம கீழே இறங்கிடிச்சாம். சிறிது சிறிதா வான்கோழியால மேலெழும்பி சிறிது தூரம் வரை பறக்க முடிஞ்சதாம். கழுகும் வான்கோழிக்கு மேலெழும்புவது, கீழிறங்குவது, அப்புறம் திசையை மாற்றி பறப்பது, வட்டமடிப்பது போன்ற பல வகையான பறக்கும் வகைகளையும் சொல்லிக்கொடுத்திச்சாம். வான்கோழி இப்போ நல்லாவே பறக்க ஆரம்பிச்சிடுச்சாம். வான்கோழிக்கு இப்போ உணவு தேட குப்பையை கிளர வேண்டிய அவசியமில்லாம போயிடுச்சாம். உயர பறந்து உணவு என்கிருக்குன்னு குறிவச்சு பாத்து அங்கே போயி சாப்பிட முடிஞ்சதாம்.

இந்த வான்கோழி பறக்கிறத பாத்த மற்ற சில ஆர்வமுள்ள வான்கோழிகளும் இந்த வான்கோழியிடம் வந்து பயிற்சி எடுத்துகிச்சாம். இப்போ இந்த வான்கோழியோட சேர்ந்து நிறைய வான்கோழிகள் பறக்க ஆரம்பிச்சிடுச்சாம். இனி எல்லா வான்கோழிகளும் பறக்கும் ஒரு காலத்தை எண்ணி இந்த வான்கோழி தன் இறக்கையை அடித்து உயர எழும்பி பறக்க ஆரம்பிச்சதாம்.

கதையின் தாக்கம்:  'Jonathan Livingston seagull' என்ற புத்தகத்தையொட்டி.