Monday, October 20, 2014

மொதன் மொதலா ஒரு மிதிவண்டி

எல்லாருக்கும் ஒரு காலத்துல மிதிவண்டி ஓட்டனும்னு ஆசை இருந்திருக்கும். அது நடைவண்டியில தொடங்கி, மூனு சக்கர மிதி வண்டியில ஆரம்பிச்சு, வாடகைக்கு மிதிவண்டி வாங்கி ஓட்டீன்னு பல வகையில் இருந்திருக்கும்.

ஒவ்வொருத்தருக்கும் முதல் மிதிவண்டி வாங்கிய நினைவு இன்னும் நிச்சயம் பசுமையா இருக்கும். நண்பர்களோட சேர்ந்து பயணத்தை அனுபவிச்சு போயிறுப்போம்.

அப்புறம் அந்த ஆசையெல்லாம் எங்க போச்சு இப்போ?  எப்படிப் போச்சு?

வயசு வந்ததும் மிதிவண்டியெல்லாம் மிக சாதாரணமா போய் பின்னர் விசையுந்து(Motorcycle) வாங்க ஆசை வந்தது. அப்புறம் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பிச்சவுடனே மகிழ்வுந்து(Car) வாங்க ஆசை வந்துருது... இதுக்கு ரெண்டு வகையான காரணம் இருக்கு. ஒன்னு புதுசா ஒரு விசயம் இருக்கு, அதை வாங்கி அதன் வேகம், சொகுசு, பயன்பாட்டு வசதி போன்றவற்றை அனுபவிச்சு பார்க்கனும். ரெண்டாவது இது ஒரு சமூக மதிப்பை கொடுக்குதுன்னு நம்புறோம். விடலை பருவத்தில இருக்கும்போது விசையுந்து சக மாணவர்கள்/மாணவிகள் மத்தியிலும் ஒரு மதிப்பையும் ஆளுமையையும் கொடுக்கிறதா நம்புகிறோம், அப்புறம் மகிழ்வுந்து உறவினர்/நண்பர் மத்தியில் மதிப்பா இருக்கும்னும் நம்புறோம்.

ஆனா இப்படி ஓரளவுக்கு வாங்கி அனுபவிச்சப்புறம் என்ன தோனும். அப்பத்தான் ஒவ்வொருவருக்கும் அவங்களோட உண்மையான ஆசை என்னன்னு புரியவரும்.

அப்படி எனக்கு வந்த ஆசைதான் இந்த மிதிவண்டி ஆசை.

இந்த ஆசை எனக்கு வற்றதுக்கு கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி  எங்க அலுவலகத்துல மிதிவண்டி ஓட்டுவத ஊக்குவிக்க ஒரு நிறுவனத்தின் மிதிவண்டிகளை பார்வைக்கு வச்சிருந்தாங்க. சும்மா விலை என்னான்னு பாத்த எனக்கு ஒரே அதிர்ச்சி.. ஒரு மிதிவண்டி பத்தாயிரம் பாஞ்சாயிரம்னு சும்மா சகட்டுமேணிக்கு விலை போட்டிருந்தாங்க.. அட ஒரு மிதிவண்டி இம்புட்டு விலையா.. அதுக்கு ரெண்டாங்கைய்யா ஒரு விசையுந்தே வாங்கிடலாமேன்னு அப்ப தோனுச்சு..

இதே கோணத்துலதான் என்னோட முதல் மிதிவண்டி கனவு ஆரம்பிச்சுச்சு..  விலை குறைவா இருக்கனும், அப்புறம் ஓட்டுவமா இல்ல ஓட்டமாட்டமான்னு தெரியாது.. எதுக்கு புதுசா வாங்கி வீண் பன்னனும். ஆக நான் ஒரு கஞ்சப்பிசினாரியா இருந்தேன்னு சொல்லாம சொல்லிட்டேன்.(இப்பவும் எனக்குள்ளே அவன் ஒளிஞ்சிட்டு அப்பப்ப தலைகாட்டிட்டு இருக்கான்).

இப்ப ரெண்டாங்கை மிதிவண்டிகள எங்க தேடுரது. அப்ப தான் எனக்கு olx, quikr அப்படிங்கிற இணையதளமெல்லாம் இதுக்குன்னே இருக்குன்னே தெரியும். சரி போடு ஒரு தேடலை.. மிதிவண்டி பத்தி எந்த அறிவும் இல்லாம தேமேன்னு விலை மலிவா ஒரு வண்டிய புடிக்கலாம்னு தேடினேன். அப்ப வந்து சேர்ந்தது தான் இந்த Hero Hawk வண்டி. 2 * 5 = 10 கியர் உள்ளது(Gear பற்றி கீழே தகவல் கொடுத்துள்ளேன்). மெலிசான சக்கரம்.
சுமாரா ஒரு 2ஆயிரத்துக்கு வாங்கினதா ஞாபகம். கே.ஆர் புரத்துல இருந்த நானு விஜயாநகர் போய் வண்டிய பாத்தா காத்தும் இல்லாம ஒன்னும் இல்லாம சும்மா புஸ்ஸுன்னு கிடந்துது. அப்புரம் காத்தடிச்சு பாத்தேன்.. பெருசா ஒன்னும் பிரச்சனையில்ல..மகிழ்வுந்துல அள்ளிகிட்டு வந்திட்டேன்.

 


உண்மையிலேயே இந்த வண்டி  நல்ல வண்டிதான். ஆனா பழசா இருந்ததால இதுல நான் நிறைய பிரச்சனைகளை சந்திச்சேன். முதல் பிரச்சனை பின்னாடி பிரச்சனை. அதாங்க உக்காருர இடத்துல. இந்த மிதிவண்டில இருக்கிற இருக்கைகளை பாருங்க. ஒல்லிக்குச்சியா இருக்கும். அப்புறம் என்ன பின்னாடி சிவந்திடும். அதுவும் குறைந்தபட்சம் 10வருசமா மிதிவண்டியே ஓட்டியதில்ல. அப்புற இந்த Gear கொஞ்ச சரியா மாறாது. ஒரு மேடு வருது நீங்க பத்தாவது Gearல இருந்து முதல் Gearக்கு போகனும்னா கொஞ்சம் மக்கர் பன்னும். ஆக இதுல ஒரு பத்து பாஞ்சு நாள் ஓட்டியிருப்பேன்.. அலுவலகத்துக்கும் போனேன். ஆனா பின்னாடி பஞ்சர் ஆயிடுச்சு(எனக்கு). சரின்னு வாங்குன விலைக்கே olxல வித்துட்டேன்.

அடுத்தது நான் அதிரடியா எடுத்த திட்டம் இந்த ஒல்லிக்குச்சி வண்டியெல்லாம் ஒத்துவராது. ஒரு குண்டாந்தடி வண்டி வாங்கலாம்னு. முன்னாடி பின்னாடி எல்லாபக்கமும் அதிர்வுரிஞ்சி(shock absorber) இருக்கனும், இருக்கை பெருசா சுருள்கம்பி(spring) வச்சதா இருக்கனும். ஆனா முக்கியமா விலை குறைவா இருக்கனும். இப்படியெல்லாம் தடாலடியா யோசிச்சு நான் வாங்கின ரெண்டாவது ரெண்டாங்கை வண்டி இதுதானுங்கோ... Hero Ranger DTB. 3500ரூ என்று ஞாபகம். அதே நெலமைதான். வண்டிய வாங்கி காத்தடிச்சு எண்ணை ஊத்தி, கழண்டு கிடக்கிற திறுகானிகள இறுக்கி முறுக்கி, நான் பட்ட பாடு அதிகம்.



பாக்கிறதுக்கு நல்லாதான் இருக்குது. குழிகள்ள ஓட்டும்போதும் நல்லாதான் இருந்துச்சு. பின்னாடிக்கும் பங்கமில்லை. ஆனா சாலைல ஓட்டும்போதுதான் எனக்கு தெரிஞ்சுது எவ்வளோ அழுத்துனாலும் இது போகவே மாட்டேங்குது. அப்புறம் அதே Gear மாத்துற தொந்தரவு. சரி வுடு கழுதைன்னு அதையும் திரும்ப அதே விலைக்கே அதே OLXல வித்துட்டேன். வாங்கினவனுக்கு எண்ணைச் செலவு மிச்சம். ஆனா இந்த வண்டி உண்மையிலேயே ஒரு மோசமான எருமை மாட்டு வண்டி. சும்மா குடுத்தாகூட வாங்கக்கூடாது.

இப்பவாச்சும் எனக்கு புத்திவந்துதா. இல்லை. இவன் எவ்வளோ அடிச்சாலும் அழவே மாட்டேங்குறானேன்னு அந்த olxகாரனே நினைச்சிருப்பான்.. அடுத்து நான் வாங்கின அதி நவீன ரெண்டாங்கை மூனாவது வண்டிதான் இந்த Fomas Road King Deluxe. 3ஆயிரம் சொச்சம்.


இது ஒரு சுமாரான வண்டிதான். வாங்கலாம் தப்பில்ல. ஆனா பழசா வாங்கினதால இதுல என்ன பிரச்சனை வந்துச்சுன்னா, சக்கரம் ஒடுக்குழுந்திருந்திச்சு, அதே பின்னாடி பிரச்சனை வந்துச்சு. இத ஒருமுறை நல்ல கடையில குடுத்து பழுது பாத்திருந்தா சரியாகியிருக்கும். ஓரளவுக்கு ஓட்டியிருக்கலாம்.

ஆனா அப்பதான் எனக்கு அந்த ஞானோதயம் பொறந்துச்சு.  இப்படி கஞ்சப்பிசுனாரித்தனமா இருக்காம உருப்படியா ஒரு நல்ல புது மிதிவண்டி வாங்குங்கற அந்த ஞானம். ரொம்ப தாமதமா வந்துச்சு. ஆனா வந்துச்சு. சரீன்னு இதையும் அதே olxல வித்துபோட்டு கொஞ்சம் வலை தளங்கள்ள படிக்க ஆரம்பிச்சேன். முக்கியமா நான் பாத்த வலைதளம் bikeszone.com. இங்க இருக்கவங்கல்லாம் ரொம்ப பெரிய ஞானம் உள்ளவங்கன்னு சொல்ல முடியாது. ஆனா ஓரளவுக்கு பரவாயில்ல. நம்பளவிட கொஞ்சம் அறிவாளி/அனுபவசாளிங்கதான். அப்ப எனக்கு கெடச்ச யோசனைல வாங்கினது தான் இந்த Rockrider 5.0.



இப்போ நாம கொஞ்சம் புத்திசாலி ஆகிட்டோம்ல. வாங்கின உடனே சேறு அடிக்காம இருக்க சக்கரகவசம்(mudguard),  சுமையிருத்தி(carrier), சுமையை கீழ விழாம கட்ட ஒரு இழுவை கயிறு(bunjee cord), தண்ணிபுட்டி வைக்க ஒரு இருத்தி(bottle holder), வண்டி நிக்கவைக்க ஒரு நிறுத்தி(stand),  கைபிடியில சற்று ஒய்யாரமா பிடிக்கிறமாதிரி ஒரு குழாய், எண் வைத்த கம்பிப் பூட்டு(cable number lock), அப்புறமா முக்கியமா ஒரு பெரிய சுருள் கம்பி வச்ச இருக்கை(இரண்டாவது படத்தில் உள்ளது), இப்படி
 எல்லாத்தையும் வாங்கி வச்சிட்டேன். நம்ம பால்யகால மிதிவண்டிகள் போல இது எல்லாம் மிதிவண்டியோடவே வராதான்னு கேட்டா.. வராது.. நாமதான் தனித் தனியா வாங்கி வச்சுக்கனும்.  இந்த மிதிவண்டியோட விலை 9000ரூ. அப்புறம் mudguard(450), carrier(650), bottle holder(150), bottle(200), cable lock(400),  back flash light 400(இரவு தொலைவு பயனத்திற்கு அவசியம்), front head light 650(இதுவும்), stand(250), helmet(1000). ஆக மிதிவண்டிக்கு மேல ஒரு மூவாயிரம் இல்ல நாலாயிரம் செலவாகும்.

ஆனா இந்த வண்டி வாங்கினப்புறம் இருந்த ஒரு நிம்மதி இருக்கே அதுதான் உச்சம். அப்பாடான்னு எங்க வேணாலும் நம்பி போகலாம். இந்த வண்டி வாங்கினப்புறம் தினமும் அலுவலகத்துக்கு மிதிவண்டி பயனம்தான். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா முன்னேறி என்னோட முதல் நெடுந்தூர பயனமானது நந்தி மலைக்கு போனது. ரொம்ப நல்ல அனுபவம். அதே மலைக்கு ஒரு ரெண்டு மூனு தடவ போயிறுப்பேன். அப்புறமா சமீபத்துல முல்லயங்கிரி மலை ஏறுனது இன்னும் நல்ல அனுபவம். இதை பத்தி நான் தனியே ஒரு பதிவு எழுத நினைச்சிட்டு இருக்கேன்.

நெடுந்தொலைவு பயனம் போறதுக்கு(>50கிமீ) ஒரு மிதிவண்டி அரைக்கால் சட்டை(cycling shorts) மிக அவசியம். இது கால்களோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் இறுக்கையோடு உராய்வதை தடுக்கும். பக்கவாட்டில் எரிச்சல் பிரச்சனைகள் வராது.  எளிதில் வியற்வை ஆவியாகும்.  சுகமாக இருக்கும். வியர்வை எளிதில் ஆவியாகும் துளையுள்ள(breathable) மேல் சட்டையும் இருந்தால் நல்லது. கீழே உள்ளது போல இரண்டும். இரவில் பயனம் செய்ய வாய்ப்பிருப்பதால் பளிச்சென்று இருக்கும் உடைகள் உகந்தது.


ஆனா இப்ப நெடுந்தொலைவு பயனம் போறதுக்கு இந்த வண்டியும் பத்தாதுன்னு தோனுது. ஒரு 30,40ஆயிரத்துக்கு ஒரு திட்டம் மனசில வச்சிட்டு இருக்கேன்.

இதுல நான் முதல்ல வாங்கின சில மிதிவண்டிகள் மோசம்னு சொல்ல முடியாது. அடிப்படைத் தேவைக்கு போதும். ஆனா வாங்கினவுடனே நான் அதை முழுசா பிரிச்சு பூட்டும்(overhaul) விட்டிருக்கனும். ஆனாலும் இவை அடிப்படை தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். நேரமும், என்ன அடிச்சாலும் அடிவாங்குற வடிவேல் போல பொருமையும் இருந்தால் நிச்சயம் முயன்று பார்க்கலாம். சில  மிக அனுபவசாலிகள் கூட மிக மலிவான மிதிவண்டிகளை வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் எளிதாக எதையும் பிரித்து பூட்டக்கூடிய அளவிற்கு அனுபவம் இருக்கும். ஆர்வம் இருக்கும்.
பழைய வண்டி வாங்கினாலும் சற்று தரமுள்ளதா பாத்து வாங்கனும்.

நாமெல்லாம் சோம்பேரிகள். கல்லூரி நாட்களுக்கு பிறகு சொகுசா வாழ்ந்து பழகியிறுபோம். மக்கர் பன்ற வண்டிய வாங்கினா அதீத ஆர்வம் இல்லாது போனால் தவிற மிதிவண்டி மேல் உள்ள ஆர்வமும் குறைய நிறைய வாய்ப்பு உண்டு.

எல்லோரும் மிதிவண்டி வாங்கும்போது மனதில் சொல்லிக்கொள்ளவேண்டிய ஒரு மந்திரம் இது "உன்னால எந்த விலையில் ரொம்ப சிரமப்பட்டு மட்டுமே வாங்க முடியுமோ அந்த விலையில் வாங்கு".

மேலும் மேலைநாட்டு இறக்குமதி செய்த மிதிவண்டிகள் அதிக தரத்தோடு இருக்கின்றன என்பதை மனது வலித்தாலும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிறுக்கிறது.  இதில் இலாபத்தோடு இறக்குமதி வரிகளும் சேர்வதால் விலை அதிகம். நம்முடைய பயன்பாடு அதிகமானால் உள்நாட்டிலும் மலிவான தரமிக்க மிதிவண்டிகள் வர சாத்தியம் அதிகமுள்ளது. 

மிதிவண்டி வாங்கும்போது கவனிக்க வேண்டிய நிறைய ஆலோசனைகள் (www.bikeszone.com) போன்ற இணையதளங்கள்ல நிறைஞ்சு இருக்கு. அதை கவனிச்சு வாங்கனும். என்ன கவனிச்சாலும் கொஞ்ச அனுபவம் வந்தாத்தான் நமக்கு எது ஒத்துவரும்னு தெரியும். இருந்தாலும் கவலைப்படவேண்டாம்.

மிதிவண்டி பற்றி சில முக்கிய தகவல்கள்:

Gear(நெம்புகோல் அல்லது சுண்டி) என்றால் என்ன:

நெறைய பேர் Gear இருந்தா வண்டி வேகமா போகும்னு நெனைக்கிறாங்க. இது மிக மிக தவறு. எனக்கு நிற்க ஒரு இடத்தை கொடுங்கள் நான் இந்த பூமியயே தூக்கி காட்டுகிறேன்னு சொன்ன அதே ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தோட வேறு வடிவ அமைப்புதாங்க இந்த Gear. ரொம்ப சுருக்கமா சொல்லப்போனா ஒரே தடவைல 50கிலோ கல்ல தூக்காம ரெண்டு தடவையா 25, 25கிலோவா தூகுறது. ஆக மொத்தம் நிகர உழைப்பு ஒன்னேதான். ஆக எந்த இடத்துல(மேடு அல்லது பள்ளம்) எந்த அளவுக்கு சக்திய செலுத்த முடியுதோ அதுக்கு தகுந்தாப்ல அந்தந்த்  Gearல வண்டிய மிதிக்கனும். Gear அதிகமா வச்சிருந்தா ஒரு நேரத்தில் அழுத்தும் சக்தி அதிகம் தேவைப்படும்(50கிலோ கல் மாதிரி). இருந்தாலும் இறக்கத்துல போகும்போது இது வசதியா இருக்கும். வேகமா செலுத்த முடியும். நீரோட்ட திசையிலயே படகு ஓட்டுர மாதிரி. ஆனா மேட்டுல மிதிக்கும்போது குறைஞ்ச Gearக்கு மாத்திக்கனும். 25,25கில்லோவா தூக்குறமாதிரி. ஆக அதிக Gearல ஒரு அழுத்துக்கு 1மீட்டர் போச்சுன்னா, குறைந்த Gearல ஒரு அழுத்துக்கு அரை மீட்டர் தான் போகும். ஆனா அழுத்த கொஞ்சம் இலகுவா இருக்கும். சமவெளியா இருந்து ஓரளவுக்கு உடல் உழைப்பும் இருந்து தினசரி தேவைக்கு பயனிப்பவர்களுக்கு Gear தேவை அதிகமிருக்காது.

மிதிவண்டி வகைகள்:

1) MTB - மலையேறும் மிதிவண்டி. சக்கரங்கள் பெரியது. அதிர்வுரிஞ்சி இருக்கும். குழி குண்டுகளில் பங்கம் வராது. புதியவர்கள் யோசிக்கலாம். தப்பில்லை. அதிர்வுரிஞ்சிகள் குழி குண்டுகளில் நம்மை காக்கும். ஆனால் முன்னால் மட்டும் அதிர்வுரிஞ்சி உள்ள வண்டிகளை மட்டுமே வாங்கவேண்டும். இரண்டு சக்கரங்களுக்கும் உள்ளதை வாங்கவே கூடாது. ஏனென்றால் அதிர்வுரிஞ்சிகள் சற்றே நமது சக்தியையும் உரிஞ்சும்.
2) Road Bike - சாலை மிதிவண்டி. வேகமாக சாலையில் செலுத்தும் வண்டி. சக்கரம் மெலிது, எடை குறைவு, விலை அதிகம், குனிந்து ஓட்டுவது, குழி குண்டுகளுக்கு ஒத்துவராது, ஆனால் சாலையில் அனுபவசாலிகளாக இருந்தால் பறக்கலாம். புதியவர்களுக்கு உகந்ததல்ல. (மேலே உள்ள Fomas அந்த வகைதான்- ஆனால் அது ஒரு போலி Road bike).
3) Hybrid: இரண்டையும் கலந்தது. இரண்டுக்கும் இடைப்பட்டது.  இரண்டின் சிறப்பும் உள்ளதுபோலவே, இரண்டின் குறைகளும் உள்ளது. அதிர்வுரிஞ்சி உள்ளது. புதியவர்களுக்கு மிக உகந்தது.
 
மிதிவண்டி உலோகங்கள்:
1) Normal Iron/steel - சாதாரண இரும்பு. நம்முடைய பழைய வகை வண்டிகள் சாதாரண இரும்பில் ஆனவை. எடை அதிகம். துரு எளிதில் ஏறும். அதிர்வுகளை உரிஞ்சாது. விலை குறைவு.
2) Special steel - நிறைய வகைகள் உள்ளது. இவை அதிவுகளை உரிஞ்சும், துறிவேறாது, எடை சற்றே குறைவாக இருக்கும். விலை குறைவு.
3) Aluminium - விலை சற்றே அதிகம். எடை மிக குறைவு. உறுதியானது. அதிர்வுகளை குறைவாகவே உரிஞ்சும்.
4) Alloy - பல உலோகங்கள் கலந்தது. உறுதியானது. விலை சற்று அதிகம். அதிர்வுகளை உரிஞ்சக்கூடியது(aluminumஐவிட)
5) Carbon Fiber - மிக இலேசானது. உறுதி காசுக்கேற்றார் போல. மிக விலை அதிகம். நெகிழி(plastic/fiber) போல் வளையும் தன்மையுள்ளதால் அதிர்வுகளை அதிகம் உரிஞ்சும். பொதுவாக பந்தய மிதிவண்டிகள் இவ்வகையே. விலை 50ஆயிரங்களில் இருந்து பல இலட்சம்வரை உள்ளது.
 

Tuesday, August 14, 2012

தோகை விரிக்கும் வான்கோழி

நான் என் பையனுக்கு சொன்ன கதை:
ஒரு ஊரில் ஒரு வான்கோழி இருந்துச்சாம். அந்த வான்கோழி தினமும் சாப்பிட்டு முடிச்சப்புறமா அன்னாந்து வானத்த பாத்துக்கிட்டு உக்காந்திருக்குமாம். அப்படி ஒரு நாள் உக்காந்திருக்கும்போது நிறைய கொக்கு ஒன்னு பின்னாடி ஒன்னு வரிசையா பறந்து போறத பாத்திச்சாம். அப்ப அட இந்த கொக்கெல்லாம் எவ்வளவு அழகா பறக்குதே நம்மாள பறக்கமுடியுமான்னு யோசனை செய்ததாம். அப்ப அதுக்கு பளீர்ன்னு ஒரு எண்ணம் தோனிச்சாம். நமக்கும் இறக்கை இருக்குதே அப்ப நாமளும் ஒரு பறவையாதானே இருக்கனும் ஆனா நாம ஏன் பறக்க மாட்டேங்கிறோம்னு தோனிச்சாம். உடனே ஓடிப்போயி அவங்க அம்மா அப்பாகிட்ட கேட்டுச்சாம் அம்மா.. அம்மா.. நாமளும் ஒரு பறவை தானே, நமக்கும் இறகு இருக்குதே, கொக்கு காகம், கழுகு மாதிரி ஏன் நாமளும் பறக்க மாட்டேங்கிறோம் அப்படீன்னு. ஆனா அதோட அம்மா அப்பாவுக்கு அது ஏன்னே தெரியலையாம். அந்த வான்கோழி அதோட நண்பர்கள் கிட்டையும் கேட்டிச்சாம். ஆனா ஒருத்தருக்குமே தெரியலையாம்.

வான்கோழிக்கு சோகமா ஆயிருச்சாம். அந்த வான்கோழி நினைச்சுதாம் சரி ஒருநாள் நாமளும் பறந்து பாக்கலாம்ன்னு. அடுத்த நாள் காலையில எல்லோரும் இறை தேடி சாப்பிட்டுகிட்டு இருக்கும்போது இந்த வான்கோழி அதோட இறகை அடிச்சு பறக்கறதுக்கு முயற்சி செஞ்சுதாம். ம்ஹூம் ஒன்னும் முடியலை. ஒரு சில இறகு பிஞ்சி கீழே விழுந்தது தான் மிச்சம். அதோட நண்பர்கள் எல்லாரும் கிண்டல் செஞ்சாங்களாம். அந்த வான்கோழி அதையெல்லாம் கண்டுக்காம பக்கத்துல இருந்த ஒரு பாறை மேல ஏறி குதிச்சி பறந்து பாத்திச்சாம். ஆனா தொப்புன்னு கீழே விழுந்திடிச்சாம். அதை பாத்த அவங்க அம்மா அப்பா சொன்னாங்களாம், பறக்கறதெல்லாம் இப்ப நமக்கு எதுக்குடா, நம்மாளயெல்லாம் பறக்க முடியாது, நமக்கு தேவை என்ன இறைதானே, அது குப்பையை கிளரினாதானே கிடைக்கும் பறக்கிறதுக்கு முயற்சி பன்னி இப்படி உன்னோட உடம்பை ஏன் நோகடிச்சுக்கிற அப்படின்னு கேட்டாங்களாம்.

இருந்தாலும் வான்கோழி எப்படியாச்சும் பறந்தே தீரனும்ங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்திச்சாம். அது பக்கதுல ஒரு குன்றுல வாழ்ந்து வந்த ஒரு கழுக போயி பாத்திச்சாம். வான்கோழி கழுகு கிட்ட எனக்கு பறக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு, ஆனா என்னால எவ்வளவு முயற்சி செய்தாலும் பறக்கவே முடியல, அதனால நீங்க எனக்கு பறக்கறதுக்கு சொல்லித்தர முடியுமான்னு கேட்டிச்சாம். அதை கேட்ட கழுகு கொஞ்ச நேரம் யோசிச்சாம். அப்புறம் வான்கோழிகிட்ட சொல்லிச்சாம் பறக்கறதுக்கு உடல் எடை அதிகமா இருக்கக் கூடாது, இறக்கைகள் ரொம்ப உறுதியாவும், உடல் எடைக்கு ஏத்த மாதிரி பெரியதாவும் இருக்கனும். ஆனா உனக்கு உடல் எடை அதிகம், காலம் காலமா உன்னோட முன்னோர்கள் பறக்கவே செய்யாததால இறகெல்லாம் சூம்பி போய் சின்னதாவும் உறுதியில்லாமலும் இருக்கு. இதையெல்லாம் மீறி நீ பறக்கனும்னா அதுக்கு உடல் வருத்தி நிறைய பயிற்சி செய்யனும். அதுக்கு நிறைய காலமும் உழைப்பும் தேவைப்படும், சிரமம் அதிகம் இருக்கும், பறவாயில்லையா உன்னால முடியுமான்னு கேட்டுச்சாம். வான்கோழிக்கு இதைக்கேட்டவுடனே ஒரு தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வந்திச்சாம். எவ்வளவு சிரமப்பட்டாலும் சரி நான் அத்தனை முயற்சியும் செய்வேன்னு உறுதியா சொல்லிச்சாம்.

கழுகு ஒவ்வொன்னா செய்யவேண்டிய பயிற்சிகளை வான்கோழிகிட்ட சொல்லிச்சாம். முதல்ல நீ உன்னோட உடல் எடையை குறைக்கனும் ஆனா அதே சமயத்துல உறுதியாவும் ஆக்கனும், அப்புறம் உன்னுடைய இறகுகளை மிக உறுதியானதாகவும் உன் உடல் எடையை தாங்கக்கூடிய வலிமை உள்ளதாவும் ஆக்கனும், அப்புறமா உன்னோட இறகுகள் சின்னதா இருக்கிறதால மற்ற பறவைகளோட உதிர்ந்த இறகுகளை சேகரிச்சு அதைக்கொண்டு செயற்கை இறக்கை தயாரித்து ஒன்றுசேர்த்து கட்டி உன்னோட இறக்கைகளை பெரியதாக ஆக்கனும். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா பறக்கறதுக்கு பயிற்சி செய்யனும்னு சொல்லிச்சாம்.

கழுகு வான்கோழிகிட்ட இதில் முதல் கட்ட பயிற்சியா உடல் எடை குறைகிறதுக்காக தினமும் பல கிலோமீட்டர் தூரம்வரை நடை பயிற்சியும், ஒடும் பயிற்சியும் செய்திட்டு கொஞ்ச காலம் கழித்து வான்னு சொல்லிச்சாம். வான்கோழி இப்படியே தொடர்ந்து நடை பயிற்சியும் ஓடும் பயிற்சியும் தொடர்ந்து ஆறு மாதம் செய்துவிட்டு கழுகுகிட்ட போய் அடுத்த பயிற்சி பத்தி கேட்டுச்சாம். இப்ப வான்கோழியின் எடை பாதியா குறைந்தும் ஆனா உடல் இரு மடங்கு உறுதியாவும் ஆயிருந்ததாம். இதுவே வான்கோழிக்கு ஒரு புத்துணர்சி வந்தாமாதிரி இருந்ததாம். கழுகு அடுத்த பயிற்சியா இறகை உறுதி செய்வதற்காக சிறு சிறு கட்டைகள் இரண்டை எடுத்து வான்கோழியின் இறக்கையில் கட்டிசாம். இப்போ மெதுவா இறக்கையை மேலும் கீழும் அசைக்க சொல்லிச்சாம். முதலில் வான்கோழி இலகுவா அசைச்சாலும் அதையே திருப்பி திருப்பி செய்யும்போது ஒரே வலி எடுத்துச்சாம். ஆனா கழுக்கு சொன்னதால தினமும் பல மணி நேரம் இந்த பயிற்சிய செஞ்சிச்சாம். மீதி நேரத்தில ஒடும் பயிற்சியையும் தொடர்ந்து வந்திச்சாம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கட்டையின் அளவை அதிகப்படுத்தி அசைக்கும் வேகத்தையும் கூட்டி பயிற்சி பன்னிச்சாம். இப்போ வான்கோழியின் இறகு கொஞ்சம் கொஞ்சமா திடமா மாறிக்கிட்டு வந்திச்சாம். சிறிது காலம் கழித்து வான்கோழி மறுடியும் கழுகுகிட்ட போச்சாம். வான்கோழியின் உறுதிய பாத்து கழுகுக்கு பெருமையா இருந்திச்சாம்.

அடுத்த கட்டமா கழுகும் வான்கோழியும் சேர்ந்து அந்த சுற்றுவட்டாரத்தில உதிர்ந்து கிடக்கிற இறகுகளை சேகரிச்சு வந்தாங்களாம். ஒரு அளவுக்கு போதுமான இறகு சேகரிச்சதும் கொஞ்சம உறுதியான ஆனா சன்னமான மூங்கில் பிரம்பு எடுத்து அதில் இறக்கை போல சேகரித்த இறகுகள் எடுத்து நரம்பு கொண்டு ஒன்றுசேர்த்து கட்டி வான் கோழியின் இறகில் சேர்த்து இனைத்து உறுதியா கட்டினாங்களாம். பின்னர் கழுகு வான்கோழிக்கிட்ட இதுவரை செய்துவந்த பயிற்சிகள் அனைத்தையும் இந்த செயற்கை இறக்கையுடன் மீண்டும் சிறிது காலத்திற்கு செய்ய சொல்லிச்சாம். வான்கோழிக்கு புதிதாக கட்டியிருக்கிற இறகை சுமந்து கொண்டு பயிற்சி செய்வது முதலில் சிரமமா இருந்திச்சாம். ஆனா போக போக பழகிடுச்சாம். இப்போ வான்கோழி பறக்கும் பயிற்சிக்கு தயார் நிலையில் இருந்திச்சாம்.
கழுகு வான்கோழியை அழைச்சு கொஞ்சம் கொஞ்சமா இறகை அடிக்க சொல்லி கொடுத்திச்சாம். வான்கோழி இறகை அசைக்க அசைக்க லேசா கால் தரையில் படாமல் மேலே போச்சாம். அவ்வளவுதான் ஒரு வினாடி தான் அதால தாக்குப்பிடிக்க முடிஞ்சதாம். அப்புறம் தாங்க முடியாம கீழே இறங்கிடிச்சாம். சிறிது சிறிதா வான்கோழியால மேலெழும்பி சிறிது தூரம் வரை பறக்க முடிஞ்சதாம். கழுகும் வான்கோழிக்கு மேலெழும்புவது, கீழிறங்குவது, அப்புறம் திசையை மாற்றி பறப்பது, வட்டமடிப்பது போன்ற பல வகையான பறக்கும் வகைகளையும் சொல்லிக்கொடுத்திச்சாம். வான்கோழி இப்போ நல்லாவே பறக்க ஆரம்பிச்சிடுச்சாம். வான்கோழிக்கு இப்போ உணவு தேட குப்பையை கிளர வேண்டிய அவசியமில்லாம போயிடுச்சாம். உயர பறந்து உணவு என்கிருக்குன்னு குறிவச்சு பாத்து அங்கே போயி சாப்பிட முடிஞ்சதாம்.

இந்த வான்கோழி பறக்கிறத பாத்த மற்ற சில ஆர்வமுள்ள வான்கோழிகளும் இந்த வான்கோழியிடம் வந்து பயிற்சி எடுத்துகிச்சாம். இப்போ இந்த வான்கோழியோட சேர்ந்து நிறைய வான்கோழிகள் பறக்க ஆரம்பிச்சிடுச்சாம். இனி எல்லா வான்கோழிகளும் பறக்கும் ஒரு காலத்தை எண்ணி இந்த வான்கோழி தன் இறக்கையை அடித்து உயர எழும்பி பறக்க ஆரம்பிச்சதாம்.

கதையின் தாக்கம்:  'Jonathan Livingston seagull' என்ற புத்தகத்தையொட்டி.

Thursday, May 17, 2012

மானங்கெட்ட முன்னோர்கள்



'அடேய் மானங்கெட்ட முன்னோர்களா எங்கடா இருக்கீங்க, ஏண்டா இப்படி பூமிய நாறடிச்சு வச்சிருக்கீங்க , நீங்க நாசமா போயிருவீங்கடா, நாசமா போயிருவீங்க...' என்று விவேக் பாணியில் வரும்கால சந்ததியினர் நம்மை திட்டப்போவது வெகு நிச்சயம்.

ஒருபுறம் பெருகிவரும் உற்பத்தி, உயர்ந்து வரும் கட்டிடங்கள், மறுபுறம் அனைத்தும் சந்தை தான் என்கிற போக்கு, இவையனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மாணங்கெட்ட முன்னோர்களாக ஆக்கி வருகின்றன என்பதில் எள்ளலவும் ஐயமில்லை.

இப்போதிருக்கும் அறிவியல் நம்முடைய இப்போதைக்கு இருக்கிற அறிவிற்கு முன்னேரிய அறிவியல் போல தோன்றலாம். ஆனால் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு அது அவ்வாறு இருக்காது. 'வெரி அட்வான்ஸ்ட் டெக்னாலஜி' என்று இப்போது நாம் மெச்சும் தொழில் நுட்பம் நமது சந்ததியினருக்கு வெறும் கைப்புள்ள அறிவியல் போலத்தான் முட்டாள்தனமாக தோன்றும். இருப்பினும் இந்த 'அட்வான்ஸ்ட் டெக்னாலஜிக்களை' பயன்படுத்தி நாம் விளைவிக்கின்ற சேதங்கள் எப்போதும் திரும்ப பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்காது. தொலைநோக்கு இல்லாமல் நாம் வீண்டிக்கின்ற வளங்கள் விளைவிக்கின்ற சேதம் ஒவ்வொன்றிற்கும் செயலுக்கும் நம்முடைய சந்ததியினர் அழுது புலம்ப வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு கட்டிடத்தை உயர்த்தெழுப்பவும் எத்துனை எத்துனை இயற்கை வளங்கள் தேவைப்படுகின்றன. ஜல்லி, சிமென்ட், மணல், இரும்பு, நீர், இவற்றில் ஒன்றையேனும் நம்மால் திரும்பவும் உருவாக்க முடியுமா. பாறையை உடைத்து ஜல்லியாக்கலாம், திரும்பவும் ஜல்லியில் இருந்து அந்தப்பாறைகளை நம்மால் உருவாக்க முடியுமா? ஜல்லியை நெரித்து அரைத்து சிமெண்ட் ஆக்கலாம், இடிந்து போன கட்டிடத்தில் இருக்கும் சிமெண்ட்டை மீண்டும் பாறையாக்க முடியுமா? கலிமண்ணை சுட்டு செங்கல், பீங்கான், டைல்ஸ் போண்றவை செய்யலாம், உடைந்து போன பீங்கானில் இருந்து மீண்டும் கலிமண்ணை கொண்டுவர முடியுமா? நாம் கட்டும் கட்டிடங்களின் ஆயுள் சில பல ஆண்டுகளே. இவற்றுக்காக நாம் அழிக்கும் இயற்கை வளங்களின் ஆயுட்காலம் எத்துனை கோடி ஆண்டுகளாக இருந்திருக்கும். நாம் அழிக்காமல் விட்டால் இன்னும் எத்துனை கோடி ஆண்டுகள் இருக்கும். இதுபோல கணிப்பொறி, செல்பேசி, வண்டி, வாகனம், எரிபொருள், ப்ளாஸ்டிக், என்று கட்டுப்பாடற்று சந்தையை மட்டுமே குறியாகக்கொண்டு தயாராகும் ஒவ்வொரு பொருளும் இயற்கை வளங்களை அழித்துத்தான் உருவாகின்றன. இவை விளைவிக்கின்ற விளைவிக்கப் போககின்ற சேதங்கள் பற்றி யாருக்கும் எண்ணிப்பார்க்க நேரமில்லை.

அனுக்களை பிளந்தால் ஆற்றல் வெளிப்படும். ஆனால் உடைந்துபோன அந்த அணுக்கள் அதற்கு பின் என்ன ஆகும்? அது ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போவது மட்டுமில்லை, உடைந்து போன யுரேனியத்தையும், தோரியத்தையும் திரும்பவும் உருவாக்க முடியாது என்பது மட்டுமில்லை, அந்த உடைந்து போன அனுக்களில் இருந்து மனித உடலையும், மரம் செடி ஆகியவற்றின் செல்களையும் கிழித்தெடுக்க கூடிய கதிர்வீச்சு அதற்குப் பின் எப்போதும் எத்துனை ஆயிரம் ஆண்டுகள் ஆனபோதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த கழிவுகளை காலம்பூராவும் நம் வருங்கால சந்ததியினர்களும் அவர்களின் சந்ததியினர்களும் பிசாசை அடைத்த பெட்டியை போல அயிரம் அயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாதுகாத்து வரவேண்டும். அனு உலை பாதுக்கப்பின்மை, தொழில்நுட்பத்தில் குறை, உயிர் அபாயம், இதன் பின்னால் இருக்கும் ஊழல் இவை அனைத்தையும் மீறி நம் வருங்கால சந்ததியினருக்கு எந்த உபயோகமுமில்லாத நாசம் விளைவிக்கும் இந்த அணுக்கழிவுகளை பாதுகாக்கும் பொருப்பை விட்டு செல்வது, எப்போதும் நீங்காது ஒட்டிக்கொண்டே இருக்கும் பிய்யை அவர்களின் வாயில் அப்பிவிட்டுசெல்வது போன்றது.

மின்சாரமில்லை அனு உலையை தொடங்குங்கள் என்பதும், பெண் கிடைக்கவில்லை அதனால் தங்கையை அல்லது தாயை கட்டிவையுங்கள் என்பதும் ஒன்றுதான். இந்த உண்மை எத்துனை பேருக்கு விளங்கும் என்று தெரியவில்லை.

இவ்வாறே கட்டுப்பாடற்று தொலைநொக்கில்லாமல் வீண்டிக்கப்படும் இந்த இயற்கை வளங்கள் இன்னும் எத்துனை காலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியும். அதற்க்குப்பின் நாமோ நமது சந்ததியினரோ என்ன செய்யமுடியும். அறிவியல் முன்னேற்றமோ பொருளாதார முன்னேற்றமோ வேண்டாமென்பதல்ல எனது வாதம். ஆனால் அறிவியல் முன்னேற்றமும் அதனொட்டி வருகின்ற பொருளாதார முன்னேற்றமும் தொலை நோக்கோடு ஆக்கபூர்வமாகவும் எல்லோருக்கும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும். சந்தை இலாபத்தையும் தற்காலிக சுயநலத்தையும் மட்டுமே குறியாக கொண்டு இருக்க கூடாது. அதுதான் உண்மையில் அறிவு உண்மையில் அறிவியல் உண்மையான முன்னேற்றம்.



Tuesday, November 17, 2009

காற்றின் திசை...

முதல் பிறந்தநாள் வரப்போகிறது என் மகனிற்கு. என்னுடைய சிறிய வயதில் எனக்கு பிறந்தநாள் என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். பள்ளி சீருடை தவிற, வண்ண புத்தாடை கிடைக்க வருடத்திற்கு இரண்டே தருணம் தான். ஒன்று தீபாவளி, மற்றொன்று பிறந்தநாள். தமிழனாக இருந்தும், விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தும் ஏனோ தமிழர் திருநாளாம் பொங்கலன்று புத்தாடை உடுத்துவது எனக்கு விபரம் தெரிந்த வயது முதல் எங்கள் பகுதியில் வழக்கில் இல்லை. பிறந்தநாளிற்கு முதல் நாள் இரவு உறக்கம் வருவது என்பது அவ்வளவு கடினம். நாளை காலை சீருடை அனியத் தேவை இல்லை. வண்ண உடை அணிந்து பை நிறைய மிட்டாய்களுடன் பள்ளிக்குச்செல்லாம். காலையில் பள்ளியில் தொழுகை கூட்டம் நடக்கும் போது மேடையில் ஏறி எல்லோருக்கும் தெரியுமாரு நிற்கலாம்,  நம்மை வாழ்த்திப் பாடுவார்கள், யாரும் எந்த காரணத்திற்காகவும் திட்ட மாட்டார்கள் இது போன்ற பல நினைவுகள் வந்து மோதிச் சென்று கொண்டிருக்கும். பொதுவாக பிறந்தநாள் என்பது தன்னை சிறப்பானவராக கருதிக்கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இந்தக் குழந்தைகள் மூன்று முதல் முப்பத்தொன்பது வரை பல வயதுகளில் இருக்கிறார்கள்.



சிறுவயதில் மிட்டாய், வண்ண புத்தாடை என்று தொடங்குகின்ற இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் பின்னர் படிப்படியாக பிறந்தநாள் வாழ்த்து அட்டை,  அழகிய வண்ண படங்கள், CERAMIC பொம்மைகள்,  பிறந்தநாள் விருந்து என்று படிப்படியாக பரிணாம வளர்சி அடைந்து வருவது இயல்பான ஒன்று. எனக்கு தெரிந்து நான் வழங்கிய பிறந்தநாள் மிட்டாய்கள் nutrine, parrys, Lacto King போன்ற நாலனா எட்டனா மிட்டாய்களே. சில பிறந்தநாளன்று கற்கண்டு கட்டிகளும், புளிப்பு மிட்டாய்களும் கொடுத்ததும் நினைவிருக்கிறது.

இப்பொழுது அலுவலகத்தில் உடன் பணிபுரிகின்ற தோழி ஒருவர் தன் மகளின் பிறந்தநாள் விழாவினை பற்றி கூறிய போது தான் நான் இன்னும் மிக பழைமையான உலகில் இருக்கிறேன் என்பதனை உணர்ந்தேன். பள்ளி வகுப்பு தோழர்/தோழிகள், தெரிந்த நண்பர்கள் எல்லோருக்கும் விலை உயர்ந்த இனிப்புக்கள், வலை தளங்களில் தேடி எடுத்த தனி வடிவங்களுடன் கூடிய சிறப்பு மிகுந்த ஆடை அணிகலன்கள், மேலும் பெரிய பிறந்தநாள் விருந்து, இன்னும் பல பல என்று நினைத்துப்பார்கையிலேயே அதிர வைக்கிறது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பாதி விடயங்களை பெற்றோர்கள் தாங்களாகவே செய்கிறார்கள், மற்ற பாதி குழந்தையின் கட்டாய வேண்டுகோளாக இருக்கிறது. குழந்தை உடன் படிப்பவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறது, அவர்களை விட ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. குழந்தையின் விருப்பம் தவறென்ற போதும் குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய பெற்றோருக்கும் மனமில்லை. இப்படி கேட்டதெல்லாம் சட்டென கிடைத்துவிடும் வரம் பெற்ற குழந்தைகளின் வளர்ச்சி எங்கனம் அமைகின்றது.  அவர்களுக்கு தோல்வியை ஏற்கும் மனப்பாங்கு அமைவது சாத்தியமா? வாழ்வில் வெற்றி என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்ளுவார்கள்? வெரும் பொருளும் பொருள் சார்ந்த விடயங்களுமே அவர்களின் இலக்காக அமையும்.  அன்பு சகமனித உறவு என்பதெல்லாம் அவர்களிடம் காத தூரம் போய் நிற்கவேண்டிவரும்.

சாதாரன ஆட்டோ ஓட்டுனரின் மகனான நான் இப்படிப்பட்ட வளமையான பிறந்தநாள் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்ளையக்  கண்டு மணம் ஏங்கியது ஏராளம். இன்னொரு புறம் சில குழந்தைகள் வண்ண புத்தாடை கிடைக்காததால் பிறந்தநாள் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையே கைவிடுவதும் உண்டு.  இதை நான் மேல்நிலைப் படிப்பிற்கு நகராட்சி பள்ளியில் சேர்ந்து படித்த போது சில வகுப்பு தோழர்களிடம் கண்கூடாகக் கண்டதுண்டு. இவர்களின் மண வளர்சியும் வளமையாக அமைவது மிக கடினம். விரும்பியது எதுவுமே கிடைக்காமல் போவதால் விருப்பங்களையே விடுத்து உளம் வெம்பி தன்நம்பிக்கை குறைந்து போவதற்க்கு வாய்புக்கள் மிக அதிகம். இன்னொருவரின் யதார்த்தமான கொண்டாட்டங்கள் கூட இவர்கள் மனம் வெம்பும் தருணமாக அமையும் சூழ்நிலைக்கு தீர்வென்பது மிகச்சிக்கலானது.  இவ்வாறான வேறுபாடுகளை எங்கனம் சமன் செய்யப்போகிறோம்.

இப்படியான குழப்பங்கள் பல சரியான விடை தெரியாமலேயே என்னுள்ளே சுற்றித்திரிவதாலும் பெரியாரின் கருத்தகளின் பால் ஈர்க்கப்பட்டதாலும் பிறந்தநாள், தீபாவளி போன்ற என்னை சிறுவயதில் ஏங்க வைத்த பிறரை இன்றும் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிற கொண்டாட்டங்களிடம் மெல்ல மெல்ல பகைமை பாராட்டத் தொடங்கி விட்டேன்.

சரி பிறந்தநாள், திருவிழா போன்ற கொண்டாட்டங்களை இனிமேல் எல்லோரும் விட்டுவிடலாமா. இப்படியே கணக்குப் பார்த்தால் எந்த ஒரு திருவிழாவும், பண்டிகையும், நோம்பி நொடியும், திருமண நாளும் கொண்டாட முடியாதே. வாழ்க்கை ஒரு இரசிப்புத்தன்மை இல்லாமல் போய்விடுமே. இவ்வாறான வாதத்தினையும் மறுப்பதற்கில்லை.

திருவிழாக்களும், மற்ற பிற தினங்களும் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வொரு தேவை இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் கிராமங்களில் வரும் திருவிழாக்கள் வெயில் காலங்களிலேயே வரும். வெயில் காலங்களில் விவசாய வேலை ஒன்றும் இருக்காது என்பதால் உறவினர் வீடுகளுக்குச்செல்ல, நல்ல உணவு உண்ண, கொண்டாட இதுதான் நல்ல நேரம் என்று அமைத்துவைக்கப்பட்ட ஒரு நினைவுறுத்திக்குச் சமமானதாகவே இத்திருவிழாக்களின் நோக்கம் தோன்றுகிறது. அது போலவே தான் நான் உன்னை மறந்துவிடவில்லை, உன்னிடம் இன்னும் அன்போடு தான் இருக்கிறேன் என்று நினைவுபடுத்த இதுபோன்ற பிறந்த தினங்களும் இன்ன பிற தினங்களும் கொண்டாடவேண்டிய தேவை சிலருக்கு உள்ளது. அடிக்கடி சந்திக்க முடியாவிட்டால் கூட ஒன்று சேர்ந்து மகிழ மற்றும் பகிர்ந்து கொள்ள ஒரு தருணமாக விருந்துகளும் வாய்ப்பாக அமையக்கூடும். மேலும் புதிதாக நட்பையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கும் இது ஒரு சரியான வாய்ப்பு. திருமணத்திற்கு முன்பு கவிதா(இப்பொது என் மனைவி) எனக்கு கூறிய பிறந்த தின வாழ்த்தை என்னால் என்றும் மறக்க இயலாது. அதுவே பின்னர் எங்களுக்குள் ஏற்பட்ட மற்ற பிற சந்திப்புக்களுக்கு காரணமாகவும் அமைந்தது. காதலும் வளர்ந்தது.

கொண்டாடுவதில் எல்லோருக்கும் ஒரே விதமான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் சூழ்நிலைக்கேற்ப்ப, அவரவர் வசதிக்கேற்ப்ப, அவரவர் தேவைக்கேற்ப்ப இக்கொண்டாட்டங்கள் அமையலாம். கால மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறும் தேவைகளின் மாற்றத்தையும் உணர்ந்து அமையும் இவ்வாறான சில கொண்டாட்டங்களை வரவேற்பதில் எவ்வித தவறுமில்லை. இருந்த போதும் இவற்றில் எதுவும் சடங்காகிப்போகிற போதும், தகுதிக்கு மீறி பிறரை பார்த்து தானும் அவ்வாறு செய்ய முயற்சி செய்கிறபோதும், தேவையில்லாத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக்கொள்கிறபோதும், தேவையில்லாத மண உளைச்சளை ஏற்படுத்துகிறபோதும், போதும்..போதும்.., என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

பிறந்தநாள் என்றதும் இவ்வாறான பல அலைமோதும் கருத்துக்களினால் குழம்பிபோயிருந்த நானும், மிகத்தெளிவாக இருந்த கவிதாவும்  எங்கள் மகனின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுவது என்று ஆலோசிக்கத் தொடங்கினோம். அப்பொழுது கவிதா கூறிய ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக்கருத்தானது, ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்குச் செல்வது, அங்கு சென்று எங்கள் மகனின் முதல் பிறந்த நாளை களிப்பது என்பதே.  இதுவும் ஒரு சடங்காகிக்கொண்டு வருகிறதோ என்று எழுந்த எண்ணங்களை ஒருபுரம் ஒதுக்கித்தள்ளிவிட்டு குழந்தைகள் காப்பகத்தில் மகனின் முதல் பிறந்தநாளை செலவிட என் முழு மனதையும் செலுத்தத் தொடங்கினேன். பெங்களுருவில் வசிக்கும் எனக்கு குழந்தைகள் காப்பகம் என்றதுமே நினைவிற்கு முதலில் தோன்றியது IGIA-INDIRA GANDHI INTERNATIONAL ACADEMY. பெயரை வைத்து அனுமானிக்க முடியாத இது ஒரு ஈழ தமிழர்களுக்கான மறுவாழ்வு மையம். குழந்தைகள் படிப்பதுவும் அங்கேயே. வசிப்பதுவும் அங்கேயே. பகலில் அதுவே வகுப்பறை. இரவில் அதுவே விடுதி அறை. நாங்கள் நடத்திக்கொண்டிருக்கும் வாழை அமைப்போடு(www.vazhai.org) தொடர்புடைய நண்பர்கள் சிலர் வெகு தீவிரமாக அங்கே கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேதான் எனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதாக உள்ளோம். பிறந்தநாள் இப்போது எனக்கு அவ்வளவு குழப்பமானதாக இல்லை.

முதல் பிறந்தநாள் கொண்டாடிய விதத்தை எவ்வளவு காலம் ஆனபோதும் ஏதோ ஒரு விதத்தில் அடிக்கடி மகனிடம் விவரிக்க நேரும். இதுபோல இன்னும் பிற சம்பவஙகளும் அமையும் போது அதுவே அவனுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் வாய்ப்புக்கள் மிக அதிகம். குழந்தைகள் இறகு போல. காற்றடிக்கும் திசையில் இறகு பறக்கும்.  இருப்பினும், காற்றின் திசை நம் கைகளில்.

Saturday, November 7, 2009

மொட்டை ஒன்னு போட்டு வந்தோம்...

முதல் காதல்... முதல் முத்தம்.. முதல் சம்பளம்.. இந்த வரிசையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது முதல் மொட்டை... மற்ற முதல் வரிசைகள் போலவே இனிமையான அனுபவங்கள் பல கற்றுக்கொண்டது என் பையனின் முதல் மொட்டையில்...

இந்த குட்டி பையன் தான் எங்களுடைய மகன்  நித்திலன்.... முடி நீளமாக வளர்ந்துவிட்டது... தலை வேர்க்கின்றது.. குழந்தைக்கு முடி வெட்டுவது கடினம்... எனவே மொட்டை போடவேண்டும். இது தான் என்னுடைய தேவையாக இருந்தது... மொட்டை என்பது குழந்தையின் தலைக்கும், சவரக்கத்திக்கும், அதை கையாள்கின்ற நாவிதருக்கும் உள்ள தொடர்பு என்று மட்டுமே தப்புக்கணக்கு போட்டிருந்தால் இதோ கீழே நான் கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்காக....

மொட்டை என்பதை சாதாரணமாக எல்லா மாதங்களிலும் அடித்துவிட முடியாது... மருத்துவரிடம் கேட்டால் ஒரு பத்து மாததிற்க்கு மேலேயோ ஒரு வருடத்திலயோ அடியுங்கள் என்பார்.. அப்போதுதான் குழந்தையின் தலையிலுள்ள திசுக்கள் அதை தாங்குமாம்... ஆனால் உங்கள் வீட்டிலுள்ள பெரிசுகளிடம் கேட்டால பதில் வேறுவிதமாக இருக்கும்..

மொட்டை என்பது ஏழு..ஒன்பது.. மற்றும் பதினொன்று மாதங்களில் மட்டுமே அடிக்க வேண்டும்.. இரண்டு வரிசை மாதங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளன.. தப்பி தவறி முதல் வருடத்தில் மொட்டை அடிக்க தவறிவிட்டீர்கள் என்றால் அப்புறம் கையை கட்டிக்கொண்டு மூன்றாவது வருடம் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.. . இரண்டு வரிசை வருடங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.. ஆக எங்கள் மகனிற்கு பதினொராவது மாதத்தில் தீபாவளி விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பொழுது மொட்டை போடுவது என்று முடிவு செய்தோம்..

மாதங்களை கணக்கிட பிறந்ததிலிருந்து முடிந்த மொத்தநாட்களை முப்பதால் வகுத்தால் போதும் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு குட்டு.. குழந்தை சித்திரை மாதத்தின் கடைசி நாளில் பிறந்தால் கூட அது ஒரு மாத கணக்காகும்.. வைகாசி முதல் தேதி வந்தாலே அது இரண்டு மாதங்கள் கணக்காகும்.. ஆக பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தாலும்  கணக்கிற்க்கு அது இரண்டு மாதம்.. இப்படித்தான் பத்தாவது மாத தொடக்கத்திலிருந்த என் மகனிற்க்கு பதினொரு மாதமானது...

முதல் மொட்டை என்பதை சும்மா யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அடித்துவிட முடியாது...ஓவ்வொருவருக்கும் குல தெய்வம் என்று இருக்கும்.. முதல் மொட்டை அடிக்க மிகச்சிறந்த ஒன்று அதுதான்.. அது அறனூறு மைல் தொலைவில் இருந்தாலும் சரி... அப்புறம் தாய் மாமன் மடியில் தான் அமரவைத்து அடிக்க வேண்டும்... சொந்த தாய் மாமன் இல்லையென்றால் ஒன்றுவிட்ட இரண்டு விட்ட தாய் மாமன்களுக்கோ, இல்லை தந்தை மாமன்களுக்கோ வாய்ப்புக்கொடுக்கப்படும்.

எங்களுடைய குல தெய்வக்கோவில் எங்கள் ஊர் கரூரிலிருந்து சுமார் இருபது கி.மி தொலைவில் இருக்கிற பரமத்தி வேலூரின் அருகாமையில் உள்ளது. நன்செய் இடையாறு இராசாயி அம்மன் எங்கள் குலதெய்வத்தின் பெயர். கோவிலை சுற்றிலும் நெல், கரும்பு, தென்னந் தோப்பு, வெற்றிலை கொடி, திராட்சை தோட்டம், வாய்க்கால், காவிரி ஆறு போன்ற நன்செய் நிலங்களாக உள்ளதால் இப்பெயர்.. என்னைப்பொருத்த வரையில் அது கோவில் என்பதை விட இனிமையாக பொழுதை களிக்க உற்ற சுற்றுலா தளம்.. எனவே அங்கு மொட்டை அடிப்பது முழு சம்மதம்.. மேலும் குல தெய்வ கோவில் என்றால் தவிற்க முடியாத ஒன்று கோழி அறுத்து அடைசல் போடுவது.. அப்படியே சாமிக்கு கொஞ்சம் படைத்துவிட்டு எல்லாருமாக உட்கார்ந்து நாட்டுக்கோழி வருவலை ஒரு வெட்டு வெட்டுவது என்பது சொல்ல தேவை இல்லாத வழக்கம்...இந்த முறை இதற்கென்றே கவிதாவின் தாத்தா இரண்டு கோழிகளை அக்கறையாய் வளர்த்து வந்தார்..

இப்படியாக மொட்டை கனவுகளுடன் தீபாவளிக்கு ஒருமாதம் முன்பிருந்தே காத்திருந்தோம்.. இந்த நேரத்தில் தான் இழுபறிக்காய் வந்து விழுந்தது ஒரு செய்தி.. என்னுடைய சமீபத்தில் இறந்து போன தாத்தாவின் அண்ணன் மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் இந்தச் செய்தி... வயது தொன்னூரு வாக்கில் இருக்கு...  இறப்பிற்குச் செல்வது என்பது எங்கள் கடமை..உடன் பங்காளி ஆயிற்றே.. நாங்கள் போகாமல் இருக்க முடியாது... கோடி போடுவது.. கருமாதி செய்வது.. விருந்து பரிமாருவது.. என்று எல்லாவற்றிலுமே எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும்..  பிரச்சனை இப்போது அது இல்லை.. இறந்தவருக்கு ஆறுமாதம் அடைப்பு போட்டது தான்.. அது என்ன அடைப்பு என்று கேட்காதீர்கள்.. எனக்கு தெரியாது... இறந்த நேரத்தை குறிப்பெடுத்து ஒரு ஜோசியரிடம் கொடுத்தால் அவர் பார்த்து சொல்வார் எத்துனை மாதம் அடைப்பு என்று.. சில நேரம் தின்னை விழும்..சில நேரம் அடைப்பு விழும்.. இரண்டுமே பிரச்சனை தான்.. அடைப்பு இல்லை தின்னை விழுந்திருக்கும் தினங்கள் வரை அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் (உடன் பங்காளிகளும்) கோவிலுக்கோ இல்லை சுப காரியமோ எதுவும் செய்ய இயலாது.. இங்கேதான் வந்தது பிரச்சனை...

குழந்தைக்கு மொட்டை அடிக்க இயலாது... எதிரொலியாய் என் காதுக்குளேயே கேட்டுக் கொண்டிருந்தது இந்த செய்தி.. எனக்கோ மொட்டை அடித்தே ஆகவேண்டும்.. ஏனென்றால் தலை வியர்த்து வியர்த்து அடிக்கடி இவனுக்கு சளி தொந்தரவு வர ஆரம்பித்தது.. அது சலூனோ இல்லை குலதெய்வக்கோவிலோ.. ஆனால் எல்லோருக்கும் அவ்வாறு இருப்பதில்லை... கவிதாவிற்க்கு குழந்தை பிறந்த்ததிலிருந்தே குழந்தை அப்புச்சி(கவிதாவின் அப்பா), அம்மாயி(அம்மா), பாட்டன்(தாத்தா), சித்தி(தங்கை), தாத்தா(என் அப்பா), ஆயா(என் அம்மா), பெரியப்பா(என் அண்ணன்), பெரியம்மா(அண்ணி), தேசிகா(அண்ணன் பெண்), அகில்(அண்ணன் மகன்) எல்லோருமாய் சேர்ந்து குலதெய்வக் கோவிலில் அடிக்கவேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் என் அம்மா அப்பாவிற்கோ உடன் பங்காளி வீட்டில் சாவு, நாம் எப்படி குலதெய்வ கோவிலில் மொட்டை அடிக்கலாம் என்ற கவலை.. குட்டி பையனிற்கு ஏதாவது ஆகிவிட்டால்.. உறவினர் என்ன சொல்லுவார்கள்.. அப்புச்சி அம்மாயிக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருந்த்து.. பல ஆலோசனைகள் வந்து விழுந்தன.. வீட்டிலேயே மொட்டை அடிக்கலாம்.. அடித்த முடியை வெள்ளை துணியில் கட்டி வைத்து அடுத்த மொட்டையின் போது குல தெய்வக்கோவிலில் சமர்பிக்கலாம்.. இல்லை மொட்டையே அடிக்க வேண்டாம்(குறிப்பு:இப்போது இல்லையென்றால் அப்புறம் மூன்றாவது வருடம் தான்), வேறு கோவிலில் அடிக்கலாம்..இப்படி பல பல..


ஒருவழியாய் என் அப்பாவையும் அம்மாவையும் மாமனாரையும் மாமியாரையும் கவிதாவையும் சமாதானம் செய்து குல தெய்வக்கோவிலிலேயே மொட்டை போடுவது(கவிதாவின் ஆசை) என்பதை முடிவு செய்வதற்குள் நான் பட்ட பாட்டை சொல்லவும் வேண்டுமா...

கவிதாவிற்க்கு தங்கை மட்டும் தான்.. மாமன் முறைக்கு அவளின் சித்தப்பா மகன்கள் உள்ளனர்.. பையன் பெங்களுருவிலேயெ இருப்பதால் யாரிடமும் அதிகம் செல்வதில்லை.. அம்மா அப்பா பாட்டி அப்புறம் மேல் வீட்டு அம்மாச்சி..அவ்வளவுதான்.. வேறு யாரிடம் சென்றாலும் ஒரே அழுகை.. இருந்தாலும் அதிகம் பழக்மில்லாத ஒன்னுவிட்ட மாமன் மடியில் தான் அடித்தாக வேண்டும்..

எல்லோருமாய் சேர்ந்து ஒருவழியாய் குலதெய்வக்கோவிலுக்கு விறகு பாத்திரம் கோழி போன்றவற்றை எடுத்துக்கட்டிகொண்டு பயனம் செய்தோம்.. (எங்கள் ஊரில் யாருக்கும் சொல்லவில்லை...)..

பின்னர் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து முடிக்கும் வரை குழந்தை ஒரே கத்து அழுகை தான்... கண்ணீர் மட்டும் இரண்டு பேர் கண்களிலிலும் (கவிதாவின் கண்களிலும் தான்).. அது ஏதோ கண்ணிற்க்கு தெரியாத ஒரு தொடர்பு.. குழந்தையின் தொண்டைக்கும் கவிதாவின் கண்களுக்கும்... பின்னர் சமைத்து முடித்து சாப்பிட்டு முடிக்கும்போது மணி நாலு... அந்த கோவிலில் உட்கார்ந்து சாப்பிடும் நாட்டு கோழி வறுவல் இருக்கிறதே அந்த சுவையை சாப்பிட்டுப்பார்த்தால் தான் உணர முடியும்... ஆனால் சுவை கோவில் என்பதால் மட்டும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்..

நிறைய தொல்லைகளுக்கு பிறகு வந்திருந்தாலும் இந்த நாள் எனக்கு (எல்லோருக்குமே) முழு மகிழ்ச்சிதான்.. சுற்றுலா போகலாம் என்று கூப்பிட்டால் இத்துனை சீக்கிரம் யாரும் வருவார்களா என்ன... என்னை பொருத்த வரை இது ஒரு ஒருநாள் சுற்றுலாதான்.. ஒருவழியாய் மொட்டையும் அடித்தாயிற்று.. இனி குட்டிப்பையனும் தொந்தரவில்லாமல் இருப்பான்..

Friday, November 6, 2009

சாதிச்சிட்டொம்... சாதிச்சிட்டோம்...!!

கொஞ்ச நாள் முன்னாடி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசிட்டிருந்தேன்... பல வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னா வேலை செஞ்சோம்..

அப்ப PMC Softwares'ன்னு ஒரு நிறுவனத்துல வேலை செஞ்சோம்... எங்களுக்கு சம்பளம்ன்னு ஒன்னும் கிடையாது. எப்படா சம்பளம் போட்டு தருவாங்கன்னு தெனமும் கனவு கண்டுட்டு இருப்போம். எங்க அரையில சமைக்கிரதால தினமும் நான் சாப்பாடு கொண்டுட்டு வருவேன். அத ரெண்டு பேருமா சாப்பிடுவோம். அப்புறம் அவன் என்ன ஒரு பெட்டி கடைக்கு கூட்டிட்டு போவான். அங்க அவனோட மதிய உணவான வாழை பழத்தை ஆளுக்கு ஒன்னா சாப்பிடுவோம். அப்புரமா கொஞ்ச நாள்ல அவன் Ramco Systems'ல சேர்ந்தான். அவன் தான் எனக்கும் அங்க வேலை வாய்ப்பு பத்தி சொன்னான். அப்புறம் நானும் Ramco'ல சேர்ந்த்துட்டேன். அப்படி அப்படியே இப்ப அவன் சிங்கப்பூர்ல இருக்கான், நான் பெங்களூர்ல இருக்கேன்.

அதே சிங்கப்பூர்ல செட்டில் ஆன ஒரு பிலிப்பினோ பெண்ண கல்யாணம் பன்னிக்க இருக்கிறதா எனக்கு பத்திரிக்கை அனுபிச்சிருந்தான்.. ரொம்ப மகிழ்ச்சியா தான் இருந்தது... அப்போ அடிக்கடி அவன் சொன்ன வார்த்தை நாம சாதிச்சிட்டோம்.. நாம சாதிச்சிட்டோம்னு...

ஆரம்ப காலங்கள்ள எனக்கும்... இப்பவும் என்ன சுத்தி இருக்கிற நண்பர்கள் பலருக்கும் பொதுவா இருக்கிற எண்ணம் நாம வாழ்கைல சாதிச்சிட்டோம்னு...

சாப்பாடுக்கே சிங்கி அடிச்சிட்டு.. மெஸ் பில் கட்ட முடியாம... நல்ல டிரஸ் எடுக்க வக்கில்லாம இருந்திட்டு இப்ப 5 நட்சத்திர உணவகத்திலே Buffet சாபிடரத நெனச்சா அப்படி என்னம் வர்றது இயற்கை தான்... ஆனா நாம என்ன பெருசா என்ன சாதிச்சிட்டோம்னு எனக்குள்ளயே கேக்கரப்போ... ஒன்னும் இல்லைன்னு தான் பதில் வருது.... என்னோட நண்பன் ஒருத்தன் physics படிச்சான். சொந்த ஊரான கரூர்லயே teacher வேலை... நேரா நேரம் அம்மா கையால சோரு... அடிக்கடி ஆப்பம் பாலுன்னு பலகாரம், அண்ணன் புள்ளைங்களோட தெனமும் வெளயாட்டு... நோம்பி வந்தா சொந்த்தகாரங்க வீடு.. முனியப்பன் கோயில் கெடா வெட்டு... bajaj c.t 100 வண்டி... தெரந்த வாசல்ல தென்ன மரம் வெச்ச சொந்த வீடு... பொருளாதார முன்னேற்றம்னு கணக்கு போட்டா கூட இங்க நான் வாங்கற சம்பளத்துல அத்தனையும் செஞ்சுக்கரதுக்கு வாழ் நாள் பூரா வேல செய்யனும் போல இருக்கு...


ஏதோ அடிக்கிற Globalization காத்துல உயரப் பறக்கிற குப்பை கூளத்துல நாமளும் ஒருத்தன்னு தான் எனக்கு எண்ணம் வருதே தவிர பெருசா ஒன்னும் சாதிச்ச மாதிரி எண்ணம் வர மாட்டேங்குது.. ஹ்ஹ்ஹ்ஹூஹூம்ம்.... காத்து எப்ப நிக்குமோ குப்பை எப்ப கீழே விழுமோ....?