Tuesday, November 17, 2009

காற்றின் திசை...

முதல் பிறந்தநாள் வரப்போகிறது என் மகனிற்கு. என்னுடைய சிறிய வயதில் எனக்கு பிறந்தநாள் என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். பள்ளி சீருடை தவிற, வண்ண புத்தாடை கிடைக்க வருடத்திற்கு இரண்டே தருணம் தான். ஒன்று தீபாவளி, மற்றொன்று பிறந்தநாள். தமிழனாக இருந்தும், விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தும் ஏனோ தமிழர் திருநாளாம் பொங்கலன்று புத்தாடை உடுத்துவது எனக்கு விபரம் தெரிந்த வயது முதல் எங்கள் பகுதியில் வழக்கில் இல்லை. பிறந்தநாளிற்கு முதல் நாள் இரவு உறக்கம் வருவது என்பது அவ்வளவு கடினம். நாளை காலை சீருடை அனியத் தேவை இல்லை. வண்ண உடை அணிந்து பை நிறைய மிட்டாய்களுடன் பள்ளிக்குச்செல்லாம். காலையில் பள்ளியில் தொழுகை கூட்டம் நடக்கும் போது மேடையில் ஏறி எல்லோருக்கும் தெரியுமாரு நிற்கலாம்,  நம்மை வாழ்த்திப் பாடுவார்கள், யாரும் எந்த காரணத்திற்காகவும் திட்ட மாட்டார்கள் இது போன்ற பல நினைவுகள் வந்து மோதிச் சென்று கொண்டிருக்கும். பொதுவாக பிறந்தநாள் என்பது தன்னை சிறப்பானவராக கருதிக்கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இந்தக் குழந்தைகள் மூன்று முதல் முப்பத்தொன்பது வரை பல வயதுகளில் இருக்கிறார்கள்.



சிறுவயதில் மிட்டாய், வண்ண புத்தாடை என்று தொடங்குகின்ற இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் பின்னர் படிப்படியாக பிறந்தநாள் வாழ்த்து அட்டை,  அழகிய வண்ண படங்கள், CERAMIC பொம்மைகள்,  பிறந்தநாள் விருந்து என்று படிப்படியாக பரிணாம வளர்சி அடைந்து வருவது இயல்பான ஒன்று. எனக்கு தெரிந்து நான் வழங்கிய பிறந்தநாள் மிட்டாய்கள் nutrine, parrys, Lacto King போன்ற நாலனா எட்டனா மிட்டாய்களே. சில பிறந்தநாளன்று கற்கண்டு கட்டிகளும், புளிப்பு மிட்டாய்களும் கொடுத்ததும் நினைவிருக்கிறது.

இப்பொழுது அலுவலகத்தில் உடன் பணிபுரிகின்ற தோழி ஒருவர் தன் மகளின் பிறந்தநாள் விழாவினை பற்றி கூறிய போது தான் நான் இன்னும் மிக பழைமையான உலகில் இருக்கிறேன் என்பதனை உணர்ந்தேன். பள்ளி வகுப்பு தோழர்/தோழிகள், தெரிந்த நண்பர்கள் எல்லோருக்கும் விலை உயர்ந்த இனிப்புக்கள், வலை தளங்களில் தேடி எடுத்த தனி வடிவங்களுடன் கூடிய சிறப்பு மிகுந்த ஆடை அணிகலன்கள், மேலும் பெரிய பிறந்தநாள் விருந்து, இன்னும் பல பல என்று நினைத்துப்பார்கையிலேயே அதிர வைக்கிறது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பாதி விடயங்களை பெற்றோர்கள் தாங்களாகவே செய்கிறார்கள், மற்ற பாதி குழந்தையின் கட்டாய வேண்டுகோளாக இருக்கிறது. குழந்தை உடன் படிப்பவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறது, அவர்களை விட ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. குழந்தையின் விருப்பம் தவறென்ற போதும் குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய பெற்றோருக்கும் மனமில்லை. இப்படி கேட்டதெல்லாம் சட்டென கிடைத்துவிடும் வரம் பெற்ற குழந்தைகளின் வளர்ச்சி எங்கனம் அமைகின்றது.  அவர்களுக்கு தோல்வியை ஏற்கும் மனப்பாங்கு அமைவது சாத்தியமா? வாழ்வில் வெற்றி என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்ளுவார்கள்? வெரும் பொருளும் பொருள் சார்ந்த விடயங்களுமே அவர்களின் இலக்காக அமையும்.  அன்பு சகமனித உறவு என்பதெல்லாம் அவர்களிடம் காத தூரம் போய் நிற்கவேண்டிவரும்.

சாதாரன ஆட்டோ ஓட்டுனரின் மகனான நான் இப்படிப்பட்ட வளமையான பிறந்தநாள் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்ளையக்  கண்டு மணம் ஏங்கியது ஏராளம். இன்னொரு புறம் சில குழந்தைகள் வண்ண புத்தாடை கிடைக்காததால் பிறந்தநாள் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையே கைவிடுவதும் உண்டு.  இதை நான் மேல்நிலைப் படிப்பிற்கு நகராட்சி பள்ளியில் சேர்ந்து படித்த போது சில வகுப்பு தோழர்களிடம் கண்கூடாகக் கண்டதுண்டு. இவர்களின் மண வளர்சியும் வளமையாக அமைவது மிக கடினம். விரும்பியது எதுவுமே கிடைக்காமல் போவதால் விருப்பங்களையே விடுத்து உளம் வெம்பி தன்நம்பிக்கை குறைந்து போவதற்க்கு வாய்புக்கள் மிக அதிகம். இன்னொருவரின் யதார்த்தமான கொண்டாட்டங்கள் கூட இவர்கள் மனம் வெம்பும் தருணமாக அமையும் சூழ்நிலைக்கு தீர்வென்பது மிகச்சிக்கலானது.  இவ்வாறான வேறுபாடுகளை எங்கனம் சமன் செய்யப்போகிறோம்.

இப்படியான குழப்பங்கள் பல சரியான விடை தெரியாமலேயே என்னுள்ளே சுற்றித்திரிவதாலும் பெரியாரின் கருத்தகளின் பால் ஈர்க்கப்பட்டதாலும் பிறந்தநாள், தீபாவளி போன்ற என்னை சிறுவயதில் ஏங்க வைத்த பிறரை இன்றும் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிற கொண்டாட்டங்களிடம் மெல்ல மெல்ல பகைமை பாராட்டத் தொடங்கி விட்டேன்.

சரி பிறந்தநாள், திருவிழா போன்ற கொண்டாட்டங்களை இனிமேல் எல்லோரும் விட்டுவிடலாமா. இப்படியே கணக்குப் பார்த்தால் எந்த ஒரு திருவிழாவும், பண்டிகையும், நோம்பி நொடியும், திருமண நாளும் கொண்டாட முடியாதே. வாழ்க்கை ஒரு இரசிப்புத்தன்மை இல்லாமல் போய்விடுமே. இவ்வாறான வாதத்தினையும் மறுப்பதற்கில்லை.

திருவிழாக்களும், மற்ற பிற தினங்களும் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வொரு தேவை இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் கிராமங்களில் வரும் திருவிழாக்கள் வெயில் காலங்களிலேயே வரும். வெயில் காலங்களில் விவசாய வேலை ஒன்றும் இருக்காது என்பதால் உறவினர் வீடுகளுக்குச்செல்ல, நல்ல உணவு உண்ண, கொண்டாட இதுதான் நல்ல நேரம் என்று அமைத்துவைக்கப்பட்ட ஒரு நினைவுறுத்திக்குச் சமமானதாகவே இத்திருவிழாக்களின் நோக்கம் தோன்றுகிறது. அது போலவே தான் நான் உன்னை மறந்துவிடவில்லை, உன்னிடம் இன்னும் அன்போடு தான் இருக்கிறேன் என்று நினைவுபடுத்த இதுபோன்ற பிறந்த தினங்களும் இன்ன பிற தினங்களும் கொண்டாடவேண்டிய தேவை சிலருக்கு உள்ளது. அடிக்கடி சந்திக்க முடியாவிட்டால் கூட ஒன்று சேர்ந்து மகிழ மற்றும் பகிர்ந்து கொள்ள ஒரு தருணமாக விருந்துகளும் வாய்ப்பாக அமையக்கூடும். மேலும் புதிதாக நட்பையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கும் இது ஒரு சரியான வாய்ப்பு. திருமணத்திற்கு முன்பு கவிதா(இப்பொது என் மனைவி) எனக்கு கூறிய பிறந்த தின வாழ்த்தை என்னால் என்றும் மறக்க இயலாது. அதுவே பின்னர் எங்களுக்குள் ஏற்பட்ட மற்ற பிற சந்திப்புக்களுக்கு காரணமாகவும் அமைந்தது. காதலும் வளர்ந்தது.

கொண்டாடுவதில் எல்லோருக்கும் ஒரே விதமான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் சூழ்நிலைக்கேற்ப்ப, அவரவர் வசதிக்கேற்ப்ப, அவரவர் தேவைக்கேற்ப்ப இக்கொண்டாட்டங்கள் அமையலாம். கால மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறும் தேவைகளின் மாற்றத்தையும் உணர்ந்து அமையும் இவ்வாறான சில கொண்டாட்டங்களை வரவேற்பதில் எவ்வித தவறுமில்லை. இருந்த போதும் இவற்றில் எதுவும் சடங்காகிப்போகிற போதும், தகுதிக்கு மீறி பிறரை பார்த்து தானும் அவ்வாறு செய்ய முயற்சி செய்கிறபோதும், தேவையில்லாத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக்கொள்கிறபோதும், தேவையில்லாத மண உளைச்சளை ஏற்படுத்துகிறபோதும், போதும்..போதும்.., என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

பிறந்தநாள் என்றதும் இவ்வாறான பல அலைமோதும் கருத்துக்களினால் குழம்பிபோயிருந்த நானும், மிகத்தெளிவாக இருந்த கவிதாவும்  எங்கள் மகனின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுவது என்று ஆலோசிக்கத் தொடங்கினோம். அப்பொழுது கவிதா கூறிய ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக்கருத்தானது, ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்குச் செல்வது, அங்கு சென்று எங்கள் மகனின் முதல் பிறந்த நாளை களிப்பது என்பதே.  இதுவும் ஒரு சடங்காகிக்கொண்டு வருகிறதோ என்று எழுந்த எண்ணங்களை ஒருபுரம் ஒதுக்கித்தள்ளிவிட்டு குழந்தைகள் காப்பகத்தில் மகனின் முதல் பிறந்தநாளை செலவிட என் முழு மனதையும் செலுத்தத் தொடங்கினேன். பெங்களுருவில் வசிக்கும் எனக்கு குழந்தைகள் காப்பகம் என்றதுமே நினைவிற்கு முதலில் தோன்றியது IGIA-INDIRA GANDHI INTERNATIONAL ACADEMY. பெயரை வைத்து அனுமானிக்க முடியாத இது ஒரு ஈழ தமிழர்களுக்கான மறுவாழ்வு மையம். குழந்தைகள் படிப்பதுவும் அங்கேயே. வசிப்பதுவும் அங்கேயே. பகலில் அதுவே வகுப்பறை. இரவில் அதுவே விடுதி அறை. நாங்கள் நடத்திக்கொண்டிருக்கும் வாழை அமைப்போடு(www.vazhai.org) தொடர்புடைய நண்பர்கள் சிலர் வெகு தீவிரமாக அங்கே கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேதான் எனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதாக உள்ளோம். பிறந்தநாள் இப்போது எனக்கு அவ்வளவு குழப்பமானதாக இல்லை.

முதல் பிறந்தநாள் கொண்டாடிய விதத்தை எவ்வளவு காலம் ஆனபோதும் ஏதோ ஒரு விதத்தில் அடிக்கடி மகனிடம் விவரிக்க நேரும். இதுபோல இன்னும் பிற சம்பவஙகளும் அமையும் போது அதுவே அவனுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் வாய்ப்புக்கள் மிக அதிகம். குழந்தைகள் இறகு போல. காற்றடிக்கும் திசையில் இறகு பறக்கும்.  இருப்பினும், காற்றின் திசை நம் கைகளில்.

Saturday, November 7, 2009

மொட்டை ஒன்னு போட்டு வந்தோம்...

முதல் காதல்... முதல் முத்தம்.. முதல் சம்பளம்.. இந்த வரிசையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது முதல் மொட்டை... மற்ற முதல் வரிசைகள் போலவே இனிமையான அனுபவங்கள் பல கற்றுக்கொண்டது என் பையனின் முதல் மொட்டையில்...

இந்த குட்டி பையன் தான் எங்களுடைய மகன்  நித்திலன்.... முடி நீளமாக வளர்ந்துவிட்டது... தலை வேர்க்கின்றது.. குழந்தைக்கு முடி வெட்டுவது கடினம்... எனவே மொட்டை போடவேண்டும். இது தான் என்னுடைய தேவையாக இருந்தது... மொட்டை என்பது குழந்தையின் தலைக்கும், சவரக்கத்திக்கும், அதை கையாள்கின்ற நாவிதருக்கும் உள்ள தொடர்பு என்று மட்டுமே தப்புக்கணக்கு போட்டிருந்தால் இதோ கீழே நான் கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்காக....

மொட்டை என்பதை சாதாரணமாக எல்லா மாதங்களிலும் அடித்துவிட முடியாது... மருத்துவரிடம் கேட்டால் ஒரு பத்து மாததிற்க்கு மேலேயோ ஒரு வருடத்திலயோ அடியுங்கள் என்பார்.. அப்போதுதான் குழந்தையின் தலையிலுள்ள திசுக்கள் அதை தாங்குமாம்... ஆனால் உங்கள் வீட்டிலுள்ள பெரிசுகளிடம் கேட்டால பதில் வேறுவிதமாக இருக்கும்..

மொட்டை என்பது ஏழு..ஒன்பது.. மற்றும் பதினொன்று மாதங்களில் மட்டுமே அடிக்க வேண்டும்.. இரண்டு வரிசை மாதங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளன.. தப்பி தவறி முதல் வருடத்தில் மொட்டை அடிக்க தவறிவிட்டீர்கள் என்றால் அப்புறம் கையை கட்டிக்கொண்டு மூன்றாவது வருடம் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.. . இரண்டு வரிசை வருடங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.. ஆக எங்கள் மகனிற்கு பதினொராவது மாதத்தில் தீபாவளி விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பொழுது மொட்டை போடுவது என்று முடிவு செய்தோம்..

மாதங்களை கணக்கிட பிறந்ததிலிருந்து முடிந்த மொத்தநாட்களை முப்பதால் வகுத்தால் போதும் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு குட்டு.. குழந்தை சித்திரை மாதத்தின் கடைசி நாளில் பிறந்தால் கூட அது ஒரு மாத கணக்காகும்.. வைகாசி முதல் தேதி வந்தாலே அது இரண்டு மாதங்கள் கணக்காகும்.. ஆக பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தாலும்  கணக்கிற்க்கு அது இரண்டு மாதம்.. இப்படித்தான் பத்தாவது மாத தொடக்கத்திலிருந்த என் மகனிற்க்கு பதினொரு மாதமானது...

முதல் மொட்டை என்பதை சும்மா யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அடித்துவிட முடியாது...ஓவ்வொருவருக்கும் குல தெய்வம் என்று இருக்கும்.. முதல் மொட்டை அடிக்க மிகச்சிறந்த ஒன்று அதுதான்.. அது அறனூறு மைல் தொலைவில் இருந்தாலும் சரி... அப்புறம் தாய் மாமன் மடியில் தான் அமரவைத்து அடிக்க வேண்டும்... சொந்த தாய் மாமன் இல்லையென்றால் ஒன்றுவிட்ட இரண்டு விட்ட தாய் மாமன்களுக்கோ, இல்லை தந்தை மாமன்களுக்கோ வாய்ப்புக்கொடுக்கப்படும்.

எங்களுடைய குல தெய்வக்கோவில் எங்கள் ஊர் கரூரிலிருந்து சுமார் இருபது கி.மி தொலைவில் இருக்கிற பரமத்தி வேலூரின் அருகாமையில் உள்ளது. நன்செய் இடையாறு இராசாயி அம்மன் எங்கள் குலதெய்வத்தின் பெயர். கோவிலை சுற்றிலும் நெல், கரும்பு, தென்னந் தோப்பு, வெற்றிலை கொடி, திராட்சை தோட்டம், வாய்க்கால், காவிரி ஆறு போன்ற நன்செய் நிலங்களாக உள்ளதால் இப்பெயர்.. என்னைப்பொருத்த வரையில் அது கோவில் என்பதை விட இனிமையாக பொழுதை களிக்க உற்ற சுற்றுலா தளம்.. எனவே அங்கு மொட்டை அடிப்பது முழு சம்மதம்.. மேலும் குல தெய்வ கோவில் என்றால் தவிற்க முடியாத ஒன்று கோழி அறுத்து அடைசல் போடுவது.. அப்படியே சாமிக்கு கொஞ்சம் படைத்துவிட்டு எல்லாருமாக உட்கார்ந்து நாட்டுக்கோழி வருவலை ஒரு வெட்டு வெட்டுவது என்பது சொல்ல தேவை இல்லாத வழக்கம்...இந்த முறை இதற்கென்றே கவிதாவின் தாத்தா இரண்டு கோழிகளை அக்கறையாய் வளர்த்து வந்தார்..

இப்படியாக மொட்டை கனவுகளுடன் தீபாவளிக்கு ஒருமாதம் முன்பிருந்தே காத்திருந்தோம்.. இந்த நேரத்தில் தான் இழுபறிக்காய் வந்து விழுந்தது ஒரு செய்தி.. என்னுடைய சமீபத்தில் இறந்து போன தாத்தாவின் அண்ணன் மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் இந்தச் செய்தி... வயது தொன்னூரு வாக்கில் இருக்கு...  இறப்பிற்குச் செல்வது என்பது எங்கள் கடமை..உடன் பங்காளி ஆயிற்றே.. நாங்கள் போகாமல் இருக்க முடியாது... கோடி போடுவது.. கருமாதி செய்வது.. விருந்து பரிமாருவது.. என்று எல்லாவற்றிலுமே எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும்..  பிரச்சனை இப்போது அது இல்லை.. இறந்தவருக்கு ஆறுமாதம் அடைப்பு போட்டது தான்.. அது என்ன அடைப்பு என்று கேட்காதீர்கள்.. எனக்கு தெரியாது... இறந்த நேரத்தை குறிப்பெடுத்து ஒரு ஜோசியரிடம் கொடுத்தால் அவர் பார்த்து சொல்வார் எத்துனை மாதம் அடைப்பு என்று.. சில நேரம் தின்னை விழும்..சில நேரம் அடைப்பு விழும்.. இரண்டுமே பிரச்சனை தான்.. அடைப்பு இல்லை தின்னை விழுந்திருக்கும் தினங்கள் வரை அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் (உடன் பங்காளிகளும்) கோவிலுக்கோ இல்லை சுப காரியமோ எதுவும் செய்ய இயலாது.. இங்கேதான் வந்தது பிரச்சனை...

குழந்தைக்கு மொட்டை அடிக்க இயலாது... எதிரொலியாய் என் காதுக்குளேயே கேட்டுக் கொண்டிருந்தது இந்த செய்தி.. எனக்கோ மொட்டை அடித்தே ஆகவேண்டும்.. ஏனென்றால் தலை வியர்த்து வியர்த்து அடிக்கடி இவனுக்கு சளி தொந்தரவு வர ஆரம்பித்தது.. அது சலூனோ இல்லை குலதெய்வக்கோவிலோ.. ஆனால் எல்லோருக்கும் அவ்வாறு இருப்பதில்லை... கவிதாவிற்க்கு குழந்தை பிறந்த்ததிலிருந்தே குழந்தை அப்புச்சி(கவிதாவின் அப்பா), அம்மாயி(அம்மா), பாட்டன்(தாத்தா), சித்தி(தங்கை), தாத்தா(என் அப்பா), ஆயா(என் அம்மா), பெரியப்பா(என் அண்ணன்), பெரியம்மா(அண்ணி), தேசிகா(அண்ணன் பெண்), அகில்(அண்ணன் மகன்) எல்லோருமாய் சேர்ந்து குலதெய்வக் கோவிலில் அடிக்கவேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் என் அம்மா அப்பாவிற்கோ உடன் பங்காளி வீட்டில் சாவு, நாம் எப்படி குலதெய்வ கோவிலில் மொட்டை அடிக்கலாம் என்ற கவலை.. குட்டி பையனிற்கு ஏதாவது ஆகிவிட்டால்.. உறவினர் என்ன சொல்லுவார்கள்.. அப்புச்சி அம்மாயிக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருந்த்து.. பல ஆலோசனைகள் வந்து விழுந்தன.. வீட்டிலேயே மொட்டை அடிக்கலாம்.. அடித்த முடியை வெள்ளை துணியில் கட்டி வைத்து அடுத்த மொட்டையின் போது குல தெய்வக்கோவிலில் சமர்பிக்கலாம்.. இல்லை மொட்டையே அடிக்க வேண்டாம்(குறிப்பு:இப்போது இல்லையென்றால் அப்புறம் மூன்றாவது வருடம் தான்), வேறு கோவிலில் அடிக்கலாம்..இப்படி பல பல..


ஒருவழியாய் என் அப்பாவையும் அம்மாவையும் மாமனாரையும் மாமியாரையும் கவிதாவையும் சமாதானம் செய்து குல தெய்வக்கோவிலிலேயே மொட்டை போடுவது(கவிதாவின் ஆசை) என்பதை முடிவு செய்வதற்குள் நான் பட்ட பாட்டை சொல்லவும் வேண்டுமா...

கவிதாவிற்க்கு தங்கை மட்டும் தான்.. மாமன் முறைக்கு அவளின் சித்தப்பா மகன்கள் உள்ளனர்.. பையன் பெங்களுருவிலேயெ இருப்பதால் யாரிடமும் அதிகம் செல்வதில்லை.. அம்மா அப்பா பாட்டி அப்புறம் மேல் வீட்டு அம்மாச்சி..அவ்வளவுதான்.. வேறு யாரிடம் சென்றாலும் ஒரே அழுகை.. இருந்தாலும் அதிகம் பழக்மில்லாத ஒன்னுவிட்ட மாமன் மடியில் தான் அடித்தாக வேண்டும்..

எல்லோருமாய் சேர்ந்து ஒருவழியாய் குலதெய்வக்கோவிலுக்கு விறகு பாத்திரம் கோழி போன்றவற்றை எடுத்துக்கட்டிகொண்டு பயனம் செய்தோம்.. (எங்கள் ஊரில் யாருக்கும் சொல்லவில்லை...)..

பின்னர் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து முடிக்கும் வரை குழந்தை ஒரே கத்து அழுகை தான்... கண்ணீர் மட்டும் இரண்டு பேர் கண்களிலிலும் (கவிதாவின் கண்களிலும் தான்).. அது ஏதோ கண்ணிற்க்கு தெரியாத ஒரு தொடர்பு.. குழந்தையின் தொண்டைக்கும் கவிதாவின் கண்களுக்கும்... பின்னர் சமைத்து முடித்து சாப்பிட்டு முடிக்கும்போது மணி நாலு... அந்த கோவிலில் உட்கார்ந்து சாப்பிடும் நாட்டு கோழி வறுவல் இருக்கிறதே அந்த சுவையை சாப்பிட்டுப்பார்த்தால் தான் உணர முடியும்... ஆனால் சுவை கோவில் என்பதால் மட்டும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்..

நிறைய தொல்லைகளுக்கு பிறகு வந்திருந்தாலும் இந்த நாள் எனக்கு (எல்லோருக்குமே) முழு மகிழ்ச்சிதான்.. சுற்றுலா போகலாம் என்று கூப்பிட்டால் இத்துனை சீக்கிரம் யாரும் வருவார்களா என்ன... என்னை பொருத்த வரை இது ஒரு ஒருநாள் சுற்றுலாதான்.. ஒருவழியாய் மொட்டையும் அடித்தாயிற்று.. இனி குட்டிப்பையனும் தொந்தரவில்லாமல் இருப்பான்..

Friday, November 6, 2009

சாதிச்சிட்டொம்... சாதிச்சிட்டோம்...!!

கொஞ்ச நாள் முன்னாடி நண்பன் ஒருத்தன் கிட்ட பேசிட்டிருந்தேன்... பல வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னா வேலை செஞ்சோம்..

அப்ப PMC Softwares'ன்னு ஒரு நிறுவனத்துல வேலை செஞ்சோம்... எங்களுக்கு சம்பளம்ன்னு ஒன்னும் கிடையாது. எப்படா சம்பளம் போட்டு தருவாங்கன்னு தெனமும் கனவு கண்டுட்டு இருப்போம். எங்க அரையில சமைக்கிரதால தினமும் நான் சாப்பாடு கொண்டுட்டு வருவேன். அத ரெண்டு பேருமா சாப்பிடுவோம். அப்புறம் அவன் என்ன ஒரு பெட்டி கடைக்கு கூட்டிட்டு போவான். அங்க அவனோட மதிய உணவான வாழை பழத்தை ஆளுக்கு ஒன்னா சாப்பிடுவோம். அப்புரமா கொஞ்ச நாள்ல அவன் Ramco Systems'ல சேர்ந்தான். அவன் தான் எனக்கும் அங்க வேலை வாய்ப்பு பத்தி சொன்னான். அப்புறம் நானும் Ramco'ல சேர்ந்த்துட்டேன். அப்படி அப்படியே இப்ப அவன் சிங்கப்பூர்ல இருக்கான், நான் பெங்களூர்ல இருக்கேன்.

அதே சிங்கப்பூர்ல செட்டில் ஆன ஒரு பிலிப்பினோ பெண்ண கல்யாணம் பன்னிக்க இருக்கிறதா எனக்கு பத்திரிக்கை அனுபிச்சிருந்தான்.. ரொம்ப மகிழ்ச்சியா தான் இருந்தது... அப்போ அடிக்கடி அவன் சொன்ன வார்த்தை நாம சாதிச்சிட்டோம்.. நாம சாதிச்சிட்டோம்னு...

ஆரம்ப காலங்கள்ள எனக்கும்... இப்பவும் என்ன சுத்தி இருக்கிற நண்பர்கள் பலருக்கும் பொதுவா இருக்கிற எண்ணம் நாம வாழ்கைல சாதிச்சிட்டோம்னு...

சாப்பாடுக்கே சிங்கி அடிச்சிட்டு.. மெஸ் பில் கட்ட முடியாம... நல்ல டிரஸ் எடுக்க வக்கில்லாம இருந்திட்டு இப்ப 5 நட்சத்திர உணவகத்திலே Buffet சாபிடரத நெனச்சா அப்படி என்னம் வர்றது இயற்கை தான்... ஆனா நாம என்ன பெருசா என்ன சாதிச்சிட்டோம்னு எனக்குள்ளயே கேக்கரப்போ... ஒன்னும் இல்லைன்னு தான் பதில் வருது.... என்னோட நண்பன் ஒருத்தன் physics படிச்சான். சொந்த ஊரான கரூர்லயே teacher வேலை... நேரா நேரம் அம்மா கையால சோரு... அடிக்கடி ஆப்பம் பாலுன்னு பலகாரம், அண்ணன் புள்ளைங்களோட தெனமும் வெளயாட்டு... நோம்பி வந்தா சொந்த்தகாரங்க வீடு.. முனியப்பன் கோயில் கெடா வெட்டு... bajaj c.t 100 வண்டி... தெரந்த வாசல்ல தென்ன மரம் வெச்ச சொந்த வீடு... பொருளாதார முன்னேற்றம்னு கணக்கு போட்டா கூட இங்க நான் வாங்கற சம்பளத்துல அத்தனையும் செஞ்சுக்கரதுக்கு வாழ் நாள் பூரா வேல செய்யனும் போல இருக்கு...


ஏதோ அடிக்கிற Globalization காத்துல உயரப் பறக்கிற குப்பை கூளத்துல நாமளும் ஒருத்தன்னு தான் எனக்கு எண்ணம் வருதே தவிர பெருசா ஒன்னும் சாதிச்ச மாதிரி எண்ணம் வர மாட்டேங்குது.. ஹ்ஹ்ஹ்ஹூஹூம்ம்.... காத்து எப்ப நிக்குமோ குப்பை எப்ப கீழே விழுமோ....?