Monday, October 20, 2014

மொதன் மொதலா ஒரு மிதிவண்டி

எல்லாருக்கும் ஒரு காலத்துல மிதிவண்டி ஓட்டனும்னு ஆசை இருந்திருக்கும். அது நடைவண்டியில தொடங்கி, மூனு சக்கர மிதி வண்டியில ஆரம்பிச்சு, வாடகைக்கு மிதிவண்டி வாங்கி ஓட்டீன்னு பல வகையில் இருந்திருக்கும்.

ஒவ்வொருத்தருக்கும் முதல் மிதிவண்டி வாங்கிய நினைவு இன்னும் நிச்சயம் பசுமையா இருக்கும். நண்பர்களோட சேர்ந்து பயணத்தை அனுபவிச்சு போயிறுப்போம்.

அப்புறம் அந்த ஆசையெல்லாம் எங்க போச்சு இப்போ?  எப்படிப் போச்சு?

வயசு வந்ததும் மிதிவண்டியெல்லாம் மிக சாதாரணமா போய் பின்னர் விசையுந்து(Motorcycle) வாங்க ஆசை வந்தது. அப்புறம் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பிச்சவுடனே மகிழ்வுந்து(Car) வாங்க ஆசை வந்துருது... இதுக்கு ரெண்டு வகையான காரணம் இருக்கு. ஒன்னு புதுசா ஒரு விசயம் இருக்கு, அதை வாங்கி அதன் வேகம், சொகுசு, பயன்பாட்டு வசதி போன்றவற்றை அனுபவிச்சு பார்க்கனும். ரெண்டாவது இது ஒரு சமூக மதிப்பை கொடுக்குதுன்னு நம்புறோம். விடலை பருவத்தில இருக்கும்போது விசையுந்து சக மாணவர்கள்/மாணவிகள் மத்தியிலும் ஒரு மதிப்பையும் ஆளுமையையும் கொடுக்கிறதா நம்புகிறோம், அப்புறம் மகிழ்வுந்து உறவினர்/நண்பர் மத்தியில் மதிப்பா இருக்கும்னும் நம்புறோம்.

ஆனா இப்படி ஓரளவுக்கு வாங்கி அனுபவிச்சப்புறம் என்ன தோனும். அப்பத்தான் ஒவ்வொருவருக்கும் அவங்களோட உண்மையான ஆசை என்னன்னு புரியவரும்.

அப்படி எனக்கு வந்த ஆசைதான் இந்த மிதிவண்டி ஆசை.

இந்த ஆசை எனக்கு வற்றதுக்கு கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி  எங்க அலுவலகத்துல மிதிவண்டி ஓட்டுவத ஊக்குவிக்க ஒரு நிறுவனத்தின் மிதிவண்டிகளை பார்வைக்கு வச்சிருந்தாங்க. சும்மா விலை என்னான்னு பாத்த எனக்கு ஒரே அதிர்ச்சி.. ஒரு மிதிவண்டி பத்தாயிரம் பாஞ்சாயிரம்னு சும்மா சகட்டுமேணிக்கு விலை போட்டிருந்தாங்க.. அட ஒரு மிதிவண்டி இம்புட்டு விலையா.. அதுக்கு ரெண்டாங்கைய்யா ஒரு விசையுந்தே வாங்கிடலாமேன்னு அப்ப தோனுச்சு..

இதே கோணத்துலதான் என்னோட முதல் மிதிவண்டி கனவு ஆரம்பிச்சுச்சு..  விலை குறைவா இருக்கனும், அப்புறம் ஓட்டுவமா இல்ல ஓட்டமாட்டமான்னு தெரியாது.. எதுக்கு புதுசா வாங்கி வீண் பன்னனும். ஆக நான் ஒரு கஞ்சப்பிசினாரியா இருந்தேன்னு சொல்லாம சொல்லிட்டேன்.(இப்பவும் எனக்குள்ளே அவன் ஒளிஞ்சிட்டு அப்பப்ப தலைகாட்டிட்டு இருக்கான்).

இப்ப ரெண்டாங்கை மிதிவண்டிகள எங்க தேடுரது. அப்ப தான் எனக்கு olx, quikr அப்படிங்கிற இணையதளமெல்லாம் இதுக்குன்னே இருக்குன்னே தெரியும். சரி போடு ஒரு தேடலை.. மிதிவண்டி பத்தி எந்த அறிவும் இல்லாம தேமேன்னு விலை மலிவா ஒரு வண்டிய புடிக்கலாம்னு தேடினேன். அப்ப வந்து சேர்ந்தது தான் இந்த Hero Hawk வண்டி. 2 * 5 = 10 கியர் உள்ளது(Gear பற்றி கீழே தகவல் கொடுத்துள்ளேன்). மெலிசான சக்கரம்.
சுமாரா ஒரு 2ஆயிரத்துக்கு வாங்கினதா ஞாபகம். கே.ஆர் புரத்துல இருந்த நானு விஜயாநகர் போய் வண்டிய பாத்தா காத்தும் இல்லாம ஒன்னும் இல்லாம சும்மா புஸ்ஸுன்னு கிடந்துது. அப்புரம் காத்தடிச்சு பாத்தேன்.. பெருசா ஒன்னும் பிரச்சனையில்ல..மகிழ்வுந்துல அள்ளிகிட்டு வந்திட்டேன்.

 


உண்மையிலேயே இந்த வண்டி  நல்ல வண்டிதான். ஆனா பழசா இருந்ததால இதுல நான் நிறைய பிரச்சனைகளை சந்திச்சேன். முதல் பிரச்சனை பின்னாடி பிரச்சனை. அதாங்க உக்காருர இடத்துல. இந்த மிதிவண்டில இருக்கிற இருக்கைகளை பாருங்க. ஒல்லிக்குச்சியா இருக்கும். அப்புறம் என்ன பின்னாடி சிவந்திடும். அதுவும் குறைந்தபட்சம் 10வருசமா மிதிவண்டியே ஓட்டியதில்ல. அப்புற இந்த Gear கொஞ்ச சரியா மாறாது. ஒரு மேடு வருது நீங்க பத்தாவது Gearல இருந்து முதல் Gearக்கு போகனும்னா கொஞ்சம் மக்கர் பன்னும். ஆக இதுல ஒரு பத்து பாஞ்சு நாள் ஓட்டியிருப்பேன்.. அலுவலகத்துக்கும் போனேன். ஆனா பின்னாடி பஞ்சர் ஆயிடுச்சு(எனக்கு). சரின்னு வாங்குன விலைக்கே olxல வித்துட்டேன்.

அடுத்தது நான் அதிரடியா எடுத்த திட்டம் இந்த ஒல்லிக்குச்சி வண்டியெல்லாம் ஒத்துவராது. ஒரு குண்டாந்தடி வண்டி வாங்கலாம்னு. முன்னாடி பின்னாடி எல்லாபக்கமும் அதிர்வுரிஞ்சி(shock absorber) இருக்கனும், இருக்கை பெருசா சுருள்கம்பி(spring) வச்சதா இருக்கனும். ஆனா முக்கியமா விலை குறைவா இருக்கனும். இப்படியெல்லாம் தடாலடியா யோசிச்சு நான் வாங்கின ரெண்டாவது ரெண்டாங்கை வண்டி இதுதானுங்கோ... Hero Ranger DTB. 3500ரூ என்று ஞாபகம். அதே நெலமைதான். வண்டிய வாங்கி காத்தடிச்சு எண்ணை ஊத்தி, கழண்டு கிடக்கிற திறுகானிகள இறுக்கி முறுக்கி, நான் பட்ட பாடு அதிகம்.பாக்கிறதுக்கு நல்லாதான் இருக்குது. குழிகள்ள ஓட்டும்போதும் நல்லாதான் இருந்துச்சு. பின்னாடிக்கும் பங்கமில்லை. ஆனா சாலைல ஓட்டும்போதுதான் எனக்கு தெரிஞ்சுது எவ்வளோ அழுத்துனாலும் இது போகவே மாட்டேங்குது. அப்புறம் அதே Gear மாத்துற தொந்தரவு. சரி வுடு கழுதைன்னு அதையும் திரும்ப அதே விலைக்கே அதே OLXல வித்துட்டேன். வாங்கினவனுக்கு எண்ணைச் செலவு மிச்சம். ஆனா இந்த வண்டி உண்மையிலேயே ஒரு மோசமான எருமை மாட்டு வண்டி. சும்மா குடுத்தாகூட வாங்கக்கூடாது.

இப்பவாச்சும் எனக்கு புத்திவந்துதா. இல்லை. இவன் எவ்வளோ அடிச்சாலும் அழவே மாட்டேங்குறானேன்னு அந்த olxகாரனே நினைச்சிருப்பான்.. அடுத்து நான் வாங்கின அதி நவீன ரெண்டாங்கை மூனாவது வண்டிதான் இந்த Fomas Road King Deluxe. 3ஆயிரம் சொச்சம்.


இது ஒரு சுமாரான வண்டிதான். வாங்கலாம் தப்பில்ல. ஆனா பழசா வாங்கினதால இதுல என்ன பிரச்சனை வந்துச்சுன்னா, சக்கரம் ஒடுக்குழுந்திருந்திச்சு, அதே பின்னாடி பிரச்சனை வந்துச்சு. இத ஒருமுறை நல்ல கடையில குடுத்து பழுது பாத்திருந்தா சரியாகியிருக்கும். ஓரளவுக்கு ஓட்டியிருக்கலாம்.

ஆனா அப்பதான் எனக்கு அந்த ஞானோதயம் பொறந்துச்சு.  இப்படி கஞ்சப்பிசுனாரித்தனமா இருக்காம உருப்படியா ஒரு நல்ல புது மிதிவண்டி வாங்குங்கற அந்த ஞானம். ரொம்ப தாமதமா வந்துச்சு. ஆனா வந்துச்சு. சரீன்னு இதையும் அதே olxல வித்துபோட்டு கொஞ்சம் வலை தளங்கள்ள படிக்க ஆரம்பிச்சேன். முக்கியமா நான் பாத்த வலைதளம் bikeszone.com. இங்க இருக்கவங்கல்லாம் ரொம்ப பெரிய ஞானம் உள்ளவங்கன்னு சொல்ல முடியாது. ஆனா ஓரளவுக்கு பரவாயில்ல. நம்பளவிட கொஞ்சம் அறிவாளி/அனுபவசாளிங்கதான். அப்ப எனக்கு கெடச்ச யோசனைல வாங்கினது தான் இந்த Rockrider 5.0.இப்போ நாம கொஞ்சம் புத்திசாலி ஆகிட்டோம்ல. வாங்கின உடனே சேறு அடிக்காம இருக்க சக்கரகவசம்(mudguard),  சுமையிருத்தி(carrier), சுமையை கீழ விழாம கட்ட ஒரு இழுவை கயிறு(bunjee cord), தண்ணிபுட்டி வைக்க ஒரு இருத்தி(bottle holder), வண்டி நிக்கவைக்க ஒரு நிறுத்தி(stand),  கைபிடியில சற்று ஒய்யாரமா பிடிக்கிறமாதிரி ஒரு குழாய், எண் வைத்த கம்பிப் பூட்டு(cable number lock), அப்புறமா முக்கியமா ஒரு பெரிய சுருள் கம்பி வச்ச இருக்கை(இரண்டாவது படத்தில் உள்ளது), இப்படி
 எல்லாத்தையும் வாங்கி வச்சிட்டேன். நம்ம பால்யகால மிதிவண்டிகள் போல இது எல்லாம் மிதிவண்டியோடவே வராதான்னு கேட்டா.. வராது.. நாமதான் தனித் தனியா வாங்கி வச்சுக்கனும்.  இந்த மிதிவண்டியோட விலை 9000ரூ. அப்புறம் mudguard(450), carrier(650), bottle holder(150), bottle(200), cable lock(400),  back flash light 400(இரவு தொலைவு பயனத்திற்கு அவசியம்), front head light 650(இதுவும்), stand(250), helmet(1000). ஆக மிதிவண்டிக்கு மேல ஒரு மூவாயிரம் இல்ல நாலாயிரம் செலவாகும்.

ஆனா இந்த வண்டி வாங்கினப்புறம் இருந்த ஒரு நிம்மதி இருக்கே அதுதான் உச்சம். அப்பாடான்னு எங்க வேணாலும் நம்பி போகலாம். இந்த வண்டி வாங்கினப்புறம் தினமும் அலுவலகத்துக்கு மிதிவண்டி பயனம்தான். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா முன்னேறி என்னோட முதல் நெடுந்தூர பயனமானது நந்தி மலைக்கு போனது. ரொம்ப நல்ல அனுபவம். அதே மலைக்கு ஒரு ரெண்டு மூனு தடவ போயிறுப்பேன். அப்புறமா சமீபத்துல முல்லயங்கிரி மலை ஏறுனது இன்னும் நல்ல அனுபவம். இதை பத்தி நான் தனியே ஒரு பதிவு எழுத நினைச்சிட்டு இருக்கேன்.

நெடுந்தொலைவு பயனம் போறதுக்கு(>50கிமீ) ஒரு மிதிவண்டி அரைக்கால் சட்டை(cycling shorts) மிக அவசியம். இது கால்களோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் இறுக்கையோடு உராய்வதை தடுக்கும். பக்கவாட்டில் எரிச்சல் பிரச்சனைகள் வராது.  எளிதில் வியற்வை ஆவியாகும்.  சுகமாக இருக்கும். வியர்வை எளிதில் ஆவியாகும் துளையுள்ள(breathable) மேல் சட்டையும் இருந்தால் நல்லது. கீழே உள்ளது போல இரண்டும். இரவில் பயனம் செய்ய வாய்ப்பிருப்பதால் பளிச்சென்று இருக்கும் உடைகள் உகந்தது.


ஆனா இப்ப நெடுந்தொலைவு பயனம் போறதுக்கு இந்த வண்டியும் பத்தாதுன்னு தோனுது. ஒரு 30,40ஆயிரத்துக்கு ஒரு திட்டம் மனசில வச்சிட்டு இருக்கேன்.

இதுல நான் முதல்ல வாங்கின சில மிதிவண்டிகள் மோசம்னு சொல்ல முடியாது. அடிப்படைத் தேவைக்கு போதும். ஆனா வாங்கினவுடனே நான் அதை முழுசா பிரிச்சு பூட்டும்(overhaul) விட்டிருக்கனும். ஆனாலும் இவை அடிப்படை தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். நேரமும், என்ன அடிச்சாலும் அடிவாங்குற வடிவேல் போல பொருமையும் இருந்தால் நிச்சயம் முயன்று பார்க்கலாம். சில  மிக அனுபவசாலிகள் கூட மிக மலிவான மிதிவண்டிகளை வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் எளிதாக எதையும் பிரித்து பூட்டக்கூடிய அளவிற்கு அனுபவம் இருக்கும். ஆர்வம் இருக்கும்.
பழைய வண்டி வாங்கினாலும் சற்று தரமுள்ளதா பாத்து வாங்கனும்.

நாமெல்லாம் சோம்பேரிகள். கல்லூரி நாட்களுக்கு பிறகு சொகுசா வாழ்ந்து பழகியிறுபோம். மக்கர் பன்ற வண்டிய வாங்கினா அதீத ஆர்வம் இல்லாது போனால் தவிற மிதிவண்டி மேல் உள்ள ஆர்வமும் குறைய நிறைய வாய்ப்பு உண்டு.

எல்லோரும் மிதிவண்டி வாங்கும்போது மனதில் சொல்லிக்கொள்ளவேண்டிய ஒரு மந்திரம் இது "உன்னால எந்த விலையில் ரொம்ப சிரமப்பட்டு மட்டுமே வாங்க முடியுமோ அந்த விலையில் வாங்கு".

மேலும் மேலைநாட்டு இறக்குமதி செய்த மிதிவண்டிகள் அதிக தரத்தோடு இருக்கின்றன என்பதை மனது வலித்தாலும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிறுக்கிறது.  இதில் இலாபத்தோடு இறக்குமதி வரிகளும் சேர்வதால் விலை அதிகம். நம்முடைய பயன்பாடு அதிகமானால் உள்நாட்டிலும் மலிவான தரமிக்க மிதிவண்டிகள் வர சாத்தியம் அதிகமுள்ளது. 

மிதிவண்டி வாங்கும்போது கவனிக்க வேண்டிய நிறைய ஆலோசனைகள் (www.bikeszone.com) போன்ற இணையதளங்கள்ல நிறைஞ்சு இருக்கு. அதை கவனிச்சு வாங்கனும். என்ன கவனிச்சாலும் கொஞ்ச அனுபவம் வந்தாத்தான் நமக்கு எது ஒத்துவரும்னு தெரியும். இருந்தாலும் கவலைப்படவேண்டாம்.

மிதிவண்டி பற்றி சில முக்கிய தகவல்கள்:

Gear(நெம்புகோல் அல்லது சுண்டி) என்றால் என்ன:

நெறைய பேர் Gear இருந்தா வண்டி வேகமா போகும்னு நெனைக்கிறாங்க. இது மிக மிக தவறு. எனக்கு நிற்க ஒரு இடத்தை கொடுங்கள் நான் இந்த பூமியயே தூக்கி காட்டுகிறேன்னு சொன்ன அதே ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தோட வேறு வடிவ அமைப்புதாங்க இந்த Gear. ரொம்ப சுருக்கமா சொல்லப்போனா ஒரே தடவைல 50கிலோ கல்ல தூக்காம ரெண்டு தடவையா 25, 25கிலோவா தூகுறது. ஆக மொத்தம் நிகர உழைப்பு ஒன்னேதான். ஆக எந்த இடத்துல(மேடு அல்லது பள்ளம்) எந்த அளவுக்கு சக்திய செலுத்த முடியுதோ அதுக்கு தகுந்தாப்ல அந்தந்த்  Gearல வண்டிய மிதிக்கனும். Gear அதிகமா வச்சிருந்தா ஒரு நேரத்தில் அழுத்தும் சக்தி அதிகம் தேவைப்படும்(50கிலோ கல் மாதிரி). இருந்தாலும் இறக்கத்துல போகும்போது இது வசதியா இருக்கும். வேகமா செலுத்த முடியும். நீரோட்ட திசையிலயே படகு ஓட்டுர மாதிரி. ஆனா மேட்டுல மிதிக்கும்போது குறைஞ்ச Gearக்கு மாத்திக்கனும். 25,25கில்லோவா தூக்குறமாதிரி. ஆக அதிக Gearல ஒரு அழுத்துக்கு 1மீட்டர் போச்சுன்னா, குறைந்த Gearல ஒரு அழுத்துக்கு அரை மீட்டர் தான் போகும். ஆனா அழுத்த கொஞ்சம் இலகுவா இருக்கும். சமவெளியா இருந்து ஓரளவுக்கு உடல் உழைப்பும் இருந்து தினசரி தேவைக்கு பயனிப்பவர்களுக்கு Gear தேவை அதிகமிருக்காது.

மிதிவண்டி வகைகள்:

1) MTB - மலையேறும் மிதிவண்டி. சக்கரங்கள் பெரியது. அதிர்வுரிஞ்சி இருக்கும். குழி குண்டுகளில் பங்கம் வராது. புதியவர்கள் யோசிக்கலாம். தப்பில்லை. அதிர்வுரிஞ்சிகள் குழி குண்டுகளில் நம்மை காக்கும். ஆனால் முன்னால் மட்டும் அதிர்வுரிஞ்சி உள்ள வண்டிகளை மட்டுமே வாங்கவேண்டும். இரண்டு சக்கரங்களுக்கும் உள்ளதை வாங்கவே கூடாது. ஏனென்றால் அதிர்வுரிஞ்சிகள் சற்றே நமது சக்தியையும் உரிஞ்சும்.
2) Road Bike - சாலை மிதிவண்டி. வேகமாக சாலையில் செலுத்தும் வண்டி. சக்கரம் மெலிது, எடை குறைவு, விலை அதிகம், குனிந்து ஓட்டுவது, குழி குண்டுகளுக்கு ஒத்துவராது, ஆனால் சாலையில் அனுபவசாலிகளாக இருந்தால் பறக்கலாம். புதியவர்களுக்கு உகந்ததல்ல. (மேலே உள்ள Fomas அந்த வகைதான்- ஆனால் அது ஒரு போலி Road bike).
3) Hybrid: இரண்டையும் கலந்தது. இரண்டுக்கும் இடைப்பட்டது.  இரண்டின் சிறப்பும் உள்ளதுபோலவே, இரண்டின் குறைகளும் உள்ளது. அதிர்வுரிஞ்சி உள்ளது. புதியவர்களுக்கு மிக உகந்தது.
 
மிதிவண்டி உலோகங்கள்:
1) Normal Iron/steel - சாதாரண இரும்பு. நம்முடைய பழைய வகை வண்டிகள் சாதாரண இரும்பில் ஆனவை. எடை அதிகம். துரு எளிதில் ஏறும். அதிர்வுகளை உரிஞ்சாது. விலை குறைவு.
2) Special steel - நிறைய வகைகள் உள்ளது. இவை அதிவுகளை உரிஞ்சும், துறிவேறாது, எடை சற்றே குறைவாக இருக்கும். விலை குறைவு.
3) Aluminium - விலை சற்றே அதிகம். எடை மிக குறைவு. உறுதியானது. அதிர்வுகளை குறைவாகவே உரிஞ்சும்.
4) Alloy - பல உலோகங்கள் கலந்தது. உறுதியானது. விலை சற்று அதிகம். அதிர்வுகளை உரிஞ்சக்கூடியது(aluminumஐவிட)
5) Carbon Fiber - மிக இலேசானது. உறுதி காசுக்கேற்றார் போல. மிக விலை அதிகம். நெகிழி(plastic/fiber) போல் வளையும் தன்மையுள்ளதால் அதிர்வுகளை அதிகம் உரிஞ்சும். பொதுவாக பந்தய மிதிவண்டிகள் இவ்வகையே. விலை 50ஆயிரங்களில் இருந்து பல இலட்சம்வரை உள்ளது.