Saturday, November 7, 2009

மொட்டை ஒன்னு போட்டு வந்தோம்...

முதல் காதல்... முதல் முத்தம்.. முதல் சம்பளம்.. இந்த வரிசையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது முதல் மொட்டை... மற்ற முதல் வரிசைகள் போலவே இனிமையான அனுபவங்கள் பல கற்றுக்கொண்டது என் பையனின் முதல் மொட்டையில்...

இந்த குட்டி பையன் தான் எங்களுடைய மகன்  நித்திலன்.... முடி நீளமாக வளர்ந்துவிட்டது... தலை வேர்க்கின்றது.. குழந்தைக்கு முடி வெட்டுவது கடினம்... எனவே மொட்டை போடவேண்டும். இது தான் என்னுடைய தேவையாக இருந்தது... மொட்டை என்பது குழந்தையின் தலைக்கும், சவரக்கத்திக்கும், அதை கையாள்கின்ற நாவிதருக்கும் உள்ள தொடர்பு என்று மட்டுமே தப்புக்கணக்கு போட்டிருந்தால் இதோ கீழே நான் கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்காக....

மொட்டை என்பதை சாதாரணமாக எல்லா மாதங்களிலும் அடித்துவிட முடியாது... மருத்துவரிடம் கேட்டால் ஒரு பத்து மாததிற்க்கு மேலேயோ ஒரு வருடத்திலயோ அடியுங்கள் என்பார்.. அப்போதுதான் குழந்தையின் தலையிலுள்ள திசுக்கள் அதை தாங்குமாம்... ஆனால் உங்கள் வீட்டிலுள்ள பெரிசுகளிடம் கேட்டால பதில் வேறுவிதமாக இருக்கும்..

மொட்டை என்பது ஏழு..ஒன்பது.. மற்றும் பதினொன்று மாதங்களில் மட்டுமே அடிக்க வேண்டும்.. இரண்டு வரிசை மாதங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளன.. தப்பி தவறி முதல் வருடத்தில் மொட்டை அடிக்க தவறிவிட்டீர்கள் என்றால் அப்புறம் கையை கட்டிக்கொண்டு மூன்றாவது வருடம் வரை உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.. . இரண்டு வரிசை வருடங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.. ஆக எங்கள் மகனிற்கு பதினொராவது மாதத்தில் தீபாவளி விடுமுறையில் ஊருக்குச் செல்லும் பொழுது மொட்டை போடுவது என்று முடிவு செய்தோம்..

மாதங்களை கணக்கிட பிறந்ததிலிருந்து முடிந்த மொத்தநாட்களை முப்பதால் வகுத்தால் போதும் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு குட்டு.. குழந்தை சித்திரை மாதத்தின் கடைசி நாளில் பிறந்தால் கூட அது ஒரு மாத கணக்காகும்.. வைகாசி முதல் தேதி வந்தாலே அது இரண்டு மாதங்கள் கணக்காகும்.. ஆக பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தாலும்  கணக்கிற்க்கு அது இரண்டு மாதம்.. இப்படித்தான் பத்தாவது மாத தொடக்கத்திலிருந்த என் மகனிற்க்கு பதினொரு மாதமானது...

முதல் மொட்டை என்பதை சும்மா யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அடித்துவிட முடியாது...ஓவ்வொருவருக்கும் குல தெய்வம் என்று இருக்கும்.. முதல் மொட்டை அடிக்க மிகச்சிறந்த ஒன்று அதுதான்.. அது அறனூறு மைல் தொலைவில் இருந்தாலும் சரி... அப்புறம் தாய் மாமன் மடியில் தான் அமரவைத்து அடிக்க வேண்டும்... சொந்த தாய் மாமன் இல்லையென்றால் ஒன்றுவிட்ட இரண்டு விட்ட தாய் மாமன்களுக்கோ, இல்லை தந்தை மாமன்களுக்கோ வாய்ப்புக்கொடுக்கப்படும்.

எங்களுடைய குல தெய்வக்கோவில் எங்கள் ஊர் கரூரிலிருந்து சுமார் இருபது கி.மி தொலைவில் இருக்கிற பரமத்தி வேலூரின் அருகாமையில் உள்ளது. நன்செய் இடையாறு இராசாயி அம்மன் எங்கள் குலதெய்வத்தின் பெயர். கோவிலை சுற்றிலும் நெல், கரும்பு, தென்னந் தோப்பு, வெற்றிலை கொடி, திராட்சை தோட்டம், வாய்க்கால், காவிரி ஆறு போன்ற நன்செய் நிலங்களாக உள்ளதால் இப்பெயர்.. என்னைப்பொருத்த வரையில் அது கோவில் என்பதை விட இனிமையாக பொழுதை களிக்க உற்ற சுற்றுலா தளம்.. எனவே அங்கு மொட்டை அடிப்பது முழு சம்மதம்.. மேலும் குல தெய்வ கோவில் என்றால் தவிற்க முடியாத ஒன்று கோழி அறுத்து அடைசல் போடுவது.. அப்படியே சாமிக்கு கொஞ்சம் படைத்துவிட்டு எல்லாருமாக உட்கார்ந்து நாட்டுக்கோழி வருவலை ஒரு வெட்டு வெட்டுவது என்பது சொல்ல தேவை இல்லாத வழக்கம்...இந்த முறை இதற்கென்றே கவிதாவின் தாத்தா இரண்டு கோழிகளை அக்கறையாய் வளர்த்து வந்தார்..

இப்படியாக மொட்டை கனவுகளுடன் தீபாவளிக்கு ஒருமாதம் முன்பிருந்தே காத்திருந்தோம்.. இந்த நேரத்தில் தான் இழுபறிக்காய் வந்து விழுந்தது ஒரு செய்தி.. என்னுடைய சமீபத்தில் இறந்து போன தாத்தாவின் அண்ணன் மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் இந்தச் செய்தி.. செய்தி ஒன்றும் எங்களுக்கு சோகமானது அல்ல.. ஏனென்றால் அவர்கள் அவ்வளவு நெருக்கம் இல்லை.. இரண்டாவது அது அவருக்கு இறப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய வயதே.வயது தொன்னூரு வாக்கில் இருக்கு...  இருந்தாலும் வேலைகளை விட்டுவிட்டு இறப்பிற்க்குச் செல்வது என்பது எங்கள் கடமை..உடன் பங்காளி ஆயிற்றே.. நாங்கள் போகாமல் இருக்க முடியாது... கோடி போடுவது.. கருமாதி செய்வது.. விருந்து பரிமாருவது.. என்று எல்லாவற்றிலுமே எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும்..  பிரச்சனை இப்போது அது இல்லை.. இறந்தவருக்கு ஆறுமாதம் அடைப்பு போட்டது தான்.. அது என்ன அடைப்பு என்று கேட்காதீர்கள்.. எனக்கு தெரியாது... இறந்த நேரத்தை குறிப்பெடுத்து ஒரு ஜோசியரிடம் கொடுத்தால் அவர் பார்த்து சொல்வார் எத்துனை மாதம் அடைப்பு என்று.. சில நேரம் தின்னை விழும்..சில நேரம் அடைப்பு விழும்.. இரண்டுமே பிரச்சனை தான்.. அடைப்பு இல்லை தின்னை விழுந்திருக்கும் தினங்கள் வரை அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் (உடன் பங்காளிகளும்) கோவிலுக்கோ இல்லை சுப காரியமோ எதுவும் செய்ய இயலாது.. இங்கேதான் வந்தது பிரச்சனை...

குழந்தைக்கு மொட்டை அடிக்க இயலாது... எதிரொலியாய் என் காதுக்குளேயே கேட்டுக் கொண்டிருந்தது இந்த செய்தி.. எனக்கோ மொட்டை அடித்தே ஆகவேண்டும்.. ஏனென்றால் தலை வியர்த்து வியர்த்து அடிக்கடி இவனுக்கு சளி தொந்தரவு வர ஆரம்பித்தது.. அது சலூனோ இல்லை குலதெய்வக்கோவிலோ.. ஆனால் எல்லோருக்கும் அவ்வாறு இருப்பதில்லை... கவிதாவிற்க்கு குழந்தை பிறந்த்ததிலிருந்தே குழந்தை அப்புச்சி(கவிதாவின் அப்பா), அம்மாயி(அம்மா), பாட்டன்(தாத்தா), சித்தி(தங்கை), தாத்தா(என் அப்பா), ஆயா(என் அம்மா), பெரியப்பா(என் அண்ணன்), பெரியம்மா(அண்ணி), தேசிகா(அண்ணன் பெண்), அகில்(அண்ணன் மகன்) எல்லோருமாய் சேர்ந்து குலதெய்வக் கோவிலில் அடிக்கவேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் என் அம்மா அப்பாவிற்கோ உடன் பங்காளி வீட்டில் சாவு, நாம் எப்படி குலதெய்வ கோவிலில் மொட்டை அடிக்கலாம் என்ற கவலை.. குட்டி பையனிற்கு ஏதாவது ஆகிவிட்டால்.. உறவினர் என்ன சொல்லுவார்கள்.. அப்புச்சி அம்மாயிக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருந்த்து.. பல ஆலோசனைகள் வந்து விழுந்தன.. வீட்டிலேயே மொட்டை அடிக்கலாம்.. அடித்த முடியை வெள்ளை துணியில் கட்டி வைத்து அடுத்த மொட்டையின் போது குல தெய்வக்கோவிலில் சமர்பிக்கலாம்.. இல்லை மொட்டையே அடிக்க வேண்டாம்(குறிப்பு:இப்போது இல்லையென்றால் அப்புறம் மூன்றாவது வருடம் தான்), வேறு கோவிலில் அடிக்கலாம்..இப்படி பல பல..


ஒருவழியாய் என் அப்பாவையும் அம்மாவையும் மாமனாரையும் மாமியாரையும் கவிதாவையும் சமாதானம் செய்து குல தெய்வக்கோவிலிலேயே மொட்டை போடுவது(கவிதாவின் ஆசை) என்பதை முடிவு செய்வதற்குள் நான் பட்ட பாட்டை சொல்லவும் வேண்டுமா...

கவிதாவிற்க்கு தங்கை மட்டும் தான்.. மாமன் முறைக்கு அவளின் சித்தப்பா மகன்கள் உள்ளனர்.. பையன் பெங்களுருவிலேயெ இருப்பதால் யாரிடமும் அதிகம் செல்வதில்லை.. அம்மா அப்பா பாட்டி அப்புறம் மேல் வீட்டு அம்மாச்சி..அவ்வளவுதான்.. வேறு யாரிடம் சென்றாலும் ஒரே அழுகை.. இருந்தாலும் அதிகம் பழக்மில்லாத ஒன்னுவிட்ட மாமன் மடியில் தான் அடித்தாக வேண்டும்..

எல்லோருமாய் சேர்ந்து ஒருவழியாய் குலதெய்வக்கோவிலுக்கு விறகு பாத்திரம் கோழி போன்றவற்றை எடுத்துக்கட்டிகொண்டு பயனம் செய்தோம்.. (எங்கள் ஊரில் யாருக்கும் சொல்லவில்லை...)..

பின்னர் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து முடிக்கும் வரை குழந்தை ஒரே கத்து அழுகை தான்... கண்ணீர் மட்டும் இரண்டு பேர் கண்களிலிலும் (கவிதாவின் கண்களிலும் தான்).. அது ஏதோ கண்ணிற்க்கு தெரியாத ஒரு தொடர்பு.. குழந்தையின் தொண்டைக்கும் கவிதாவின் கண்களுக்கும்... பின்னர் சமைத்து முடித்து சாப்பிட்டு முடிக்கும்போது மணி நாலு... அந்த கோவிலில் உட்கார்ந்து சாப்பிடும் நாட்டு கோழி வறுவல் இருக்கிறதே அந்த சுவையை சாப்பிட்டுப்பார்த்தால் தான் உணர முடியும்... ஆனால் சுவை கோவில் என்பதால் மட்டும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்..

நிறைய தொல்லைகளுக்கு பிறகு வந்திருந்தாலும் இந்த நாள் எனக்கு (எல்லோருக்குமே) முழு மகிழ்ச்சிதான்.. சுற்றுலா போகலாம் என்று கூப்பிட்டால் இத்துனை சீக்கிரம் யாரும் வருவார்களா என்ன... என்னை பொருத்த வரை இது ஒரு ஒருநாள் சுற்றுலாதான்.. ஒருவழியாய் மொட்டையும் அடித்தாயிற்று.. இனி குட்டிப்பையனும் தொந்தரவில்லாமல் இருப்பான்..

5 comments:

Rajendra Prasad, P said...

நல்ல நடையும், படங்களின் இணைப்பும் சேர்ந்து, நகரத்திலிருந்து விலக்கி சற்று இளைபாறுதல் தருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
(நிதிலன் முகத்தில் மொட்டைக்கு முன்பு கூடுதல் மகிழ்ச்சி தெரிகிறது; அனேகமா பங்க் வள்ப்பான்னு தோணுது).

யூர்கன் க்ருகியர் said...

:)

அன்புடன் அருணா said...

ஹஹாஹாஹா....திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது!

லிங்காபுரம்-சிவா said...

//அந்த கோவிலில் உட்கார்ந்து சாப்பிடும் நாட்டு கோழி வறுவல் இருக்கிறதே அந்த சுவையை சாப்பிட்டுப்பார்த்தால் தான் உணர முடியும்... ஆனால் சுவை கோவில் என்பதால் மட்டும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.. //

ஹஹா... என்க்கும் சின்ன வயசுல (ஒரு 3 இருக்கும்) குல தெய்வ கோயில்ல தான் மொட்ட போட்டாங்க... :)

பழமைபேசி said...

Congrats to நிதிலன்!

Post a Comment

உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள...